Friday, August 7, 2009

மனதை திற - மகிழ்ச்சி வரட்டும் - 2

ஆமையும் மொசலும் ஓட்டப்பந்தயம் வெச்சுட்டு, பாதி வழில மொசலு தூங்கி, ஆமை தூங்காம ஸ்ட்ரெய்ட்டா போய் கெலிச்சு, கடசியில ஸ்லோவார்ந்தாலும் ஸ்டெடியாக்கறவன் தான் ஜெயிப்பான்னு சொல்லுச்சுன்னு கேள்விப்பட்டுக்கறோம். ஆனா அதுக்கு அப்பாலிக்கா இன்னா நடந்துதுன்னா,

மொசலுக்கு ஒரே ஃபீலிங்க்ஸ் ஆயிடுச்சு, ”சே, இத்தினி தெறம இருந்தும் ஜஸ்ட் மிஸ் ஆயிருச்சேடா, எங்க ராங் ஆச்சு” ன்னு ரோசன பண்ணிகினே, ”இன்னொரு தபா ரேஸ் உட்லாம், வரியா” ன்னு ஆமை கைல கேட்டுச்சாம். ஆமையும் சரின்னு சொல்ல, இந்த தபா, ஸ்டார்டிங்லர்ந்து சுகுர்றா ஒரே மூச்சுல ஓடி ஜெயிச்சதுக்கப்புறம் தான் மொசலு திரும்பி லுக் உட்டுச்சாம். அங்க என்னடான்னா, ஆமை அசைஞ்சு ஆடி மெதுவா வந்து மூச்சு வாங்கிகிட்டிருந்துச்சாம்.

இதுலர்ந்து இன்னா தெர்துன்னா நிதானமா இக்கறது நல்லதுதான், ஆனா நிதானமா இர்க்க சொல்லோ, ஸ்பீடா, கரீக்டா வரிஞ்சிருக்கற கோட்டு மேலயே ஓடின்னுக்கணும், அப்பத்தான் ஜெயிக்க முடியும் னு மொசலு சிரிச்சுச்சாம்.

இப்ப ஆமைக்கு பேஜாரா பூடுச்சி, என்னதான் ட்ரை பண்ணாலும் இவனை ஜெயிக்க முடியாதுடான்னு நெனச்சுகுனு, எப்டியாவது ஜெயிக்கணுமே இன்னா பண்லாம்னு மல்லாக்கப் படுத்து ரோசனை பண்ணுச்சாம், கம்னு இருந்தா சரிப்படாது, இதுக்கு வேற ஐடியாத்தான் பண்ணனும்னு முடிவு எட்துகுனு ”மாப்ள, இன்னொரு ரவுண்டு போலாம், ஆனா நான் சொல்ற ரூட்ல தான் போவணும்” னு சொல்லுச்சாம். அதுக்கு மொசலு, ”ஹூம், நீயெல்லாம் எனக்கு ஜூஜூபிடா, எந்த ரூட் வேணா சொல்லு, நா ரெடி” ன்னுச்சாம்.

ரெடி ஸ்டார்ட்னு ஆரம்பிக்க சொல்ல, மொசலு எந்த ரூட்னாலும் நம்ம ஸ்பீடுக்கு வாடா பாக்கலாம்னுட்டு ஓடிக்கினே இருக்க சொல்லோ, கொஞ்ச தூரம் போயி அந்த ரூட்டை பாத்து பேஜாராயிடுச்சாம். மேட்டர் இன்னானா, ஆமை சொன்ன ரூட்ல ஒரு ஆறு ஓடின்னுக்குது. இத்த எப்பட்றா கிராஸிங் பண்றதுன்னு மொசலு பஞ்சரான லாரி கணக்கா நின்னுனு இருக்க சொல்லோ, ஆமை மொசல கிராஸ் பண்ணி, அதும்பாட்டுக்கு நீந்தி போயி ”நாந்தாண்டா வின்னிங்” னுச்சாம்.

இப்ப மொசலு மெர்சலாயிடுச்சு, இன்னாடா இத்தினி ஸ்பீடா வந்தும் அவன் வின்னிங் ஆயிட்டானேன்னு ஒரே கவல.

இதுலர்ந்து இன்னா தெர்துன்னா, உங்கையில இன்னா மேட்டர் சாலிடா இக்குதோ, அதுல பூந்து அடிச்சு ஆடு நைனா, சும்மா ”பில்லா” ஓடிச்சேன்னு ”வில்லு” வும் மைதானத்துக்கு வந்தா அப்புறம் மொசலுக்கு அடிச்ச அதே ஆப்புதான்.

மொசலு இத்தோட விட்டுச்சா, அதான் இங்க மேட்டரே, இத்தினி தபா ரேஸ் உட்டுகுனே இருக்க சொல்ல, மொசலும் ஆமையும் தோஸ்த் ஆயினுக்குறாங்கோ, இப்ப ஒரு ரேஸ் வெச்சு ரெண்டு பேரும் ஜெயிக்கணும், இன்னா பண்றதுன்னு ஒரு மீட்டிங் போட்டு, உன் திறமை என்னுது, என் திறமை உன்னுதுன்னு ஒரு உலக மகா அக்ரிமெண்ட் போட்டுகுனாங்கோ, நிலத்துல ஓட சொல்லோ மொசலு மேல ஆமை ஏறிகிச்சு, ஆத்துல போக சொல்லோ ஆமை மேல மொசலு ஏறிகிச்சு, ரெண்டு பேரும் கரீக்டா ஒரே டயத்துக்கு வின்னிங் ஆயிட்டாங்கோ.

இதுலர்ந்து இன்னா தெரியுதுன்னா,

தோத்து போனாலும், ஆமையாகட்டும், மொசலாகட்டும், ஜெயிக்கணுங்கற வெறிய கொறச்சுக்கல.
ரெண்டு பேரும் ஏனோ தானோன்னு இல்லாம முழு திறமையும் வெச்சு முயற்சி பண்ணுனாங்கோ.
அப்பவும் ஜெயிக்க முடியலயா, ஆமை கணக்கா ரூட்ட மாத்து, ஏன்னாக்கா, பிரச்சனை உங்கிட்ட இல்ல, நீ போற ரூட்லதான் .

அப்பாலிக்கா, இன்னொண்ண கண்டுக்கினியா,

நீ தனியா ஓடுனா உன்னால எத்தினி தூரம் முடியுதோ அத்தினி தூரந்தான் ஓடுவே,ஆனா அல்லாரோடயும் சேர்ந்து ஓடுனா, அல்லாராலும் எத்தினி தூரம் போக முடியுமோ அத்தினி தூரம் போவ.

கடசியா ஒண்ணு,

உன்னால ஒண்ணு முடியலயா,முடியறவனோட சேர்ந்துக்கோ,

மனச தொறந்தீனாத்தான் மகிழ்ச்சி.

Thursday, August 6, 2009

சகதியில் அகதிகள் - நிற வெறியின் உச்சகட்டம்.

குஜராத்தின் வடமேற்குக் கரைப் பகுதியான கட்ச் மாவட்டத்தின் பாலைவனப் பகுதிகளில் 1995 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். தரிசு நிலமாயும், பாலைவன மணல் பிரதேசமாயும் இருந்தாலும், ஆங்காங்கே நீரூற்றுகள் இருக்கத்தான் செய்கிறது. இந்த மண்ணில் எல்லை பாதுகாப்பு படை (BSF), கடலோர காவல் படை ( Coast Guard), சிறப்பு பாதுகாப்பு துறை ( Special Security Bearu), இந்திய உளவுத் துறையான RAW என எல்லா கோஷ்டிகளும், அவரவர் சீருடையில் வலம் வருகிறார்கள்.

இதில் விசேஷம் என்னவென்றால், கட்ச் வளைகுடாவின் மூக்கு போலிருக்கும் நிலப் பரப்பான நாராயண சரோவர் என்னும் சிவன் கோவில் உள்ள ஒரு இடம், பாகிஸ்தானுக்கு வெகு அருகில் உள்ளது. ஒரு மீன்பிடி படகு, அதில் ஓரிரு பெண்கள், தையல் இயந்திரம், ஆட்டுக்குட்டி, ஒரு குடும்பத்தலைவன், ஓரிரு குழந்தைகள், மற்றும் வாலிபர்கள் என ஒரு கூட்டுக் குடும்பம் தனது வீட்டின் தட்டு முட்டு சாமன்களோடு ஒரு மீன்பிடி படகில் ஏறி, அந்த அரபிக் கடலோரம் என பாட்டு பாடிக் கொண்டு, கராச்சியிலிருந்து ஒரு மூன்று மணி நேரம் துடுப்பு வலித்தார்களெனில், இந்திய கடல் எல்லைக்குள் சர்வ சாதரணமாக நுழைய முடியும். நுழைந்தவுடன் அநேகமாக எல்லா சமயங்களிலும், நமது கடலோரக் காவல் படையினர் வந்து அந்த மீன்பிடி படகை கட்டி இழுத்துக்கொண்டு வந்து ராஜ உபசாரங்களுடன் காவல் துறையில் ஒப்படைத்து விடுவார்கள். தப்பித்தவறி இந்தப் படகு சீந்துவாரில்லாமல் கடலில் நிற்குமானால், படகில் அமர்ந்திருக்கும் பெண்கள் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து, நல்ல வெய்யிலில் அதை கரையை நோக்கி காண்பிப்பார்கள். கண்ணாடியின் வெளிச்சம் கரையிலிருக்கும் காவல் படையினரின் கண்களை கூச வைக்கும். உடனே இங்கிருந்து மோட்டார் படகுகள் விரைந்து சென்று அந்த படகை கட்டி இழுத்து வரும். துடுப்பு வலிக்கும் கஷ்டமெல்லாம் அவர்களுக்கு இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணமோ என்னவோ. காவல் துறையும் அவர்களை (பாகிஸ்தானியர்களை) அகதிகள் பட்டியலில் பெயரெழுதிவிட்டு, அங்கிருக்கும் அகதிகள் முகாமில் சேர்த்து விடுவார்கள், அல்லது, அந்த படகிலிருந்து எவ்வளவு பணம் தேறுகிறதோ அதற்கு தகுந்தாற்போல் அவர்கள் நடத்தப்படுவார்கள். கராச்சியிலிருந்தால் ஒரு வேளை சோற்றுக்கும், அடுத்த மணி நேர பாதுகாப்புக்கும் உத்தரவாதமில்லாத ஒரு வெளிநாட்டவனுக்கு என் பாரத மண்ணில் மூன்று வேளை சோறும், பயமில்லாத வாழ்வும் வெறும் ஒரு சில ரூபாய் நோட்டுகளை அவன் காண்பித்து விட்டானெனில், இலவசமாய் அளிக்கப் படுகிறது.

பங்களாதேஷின் ஜிகர்கச்சா, ராஜ்ஷாஹி, சதிரா போன்ற மேற்கு பகுதி சிறு நகரங்களிலிருந்து இந்தியாவுக்குள், தினமும் நுழைய முற்படுவோர் அநேகர். அதிலும் தாங்கள் பங்களாதேஷிகள் என்ற அடையாளத்துடன் நுழைய வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாயிருக்கும். அப்பொழுதுதான் இந்திய அரசாங்கம் அவர்களுக்கு அகதிகள் என்ற அந்தஸ்தை கொடுத்து எல்லா ராஜ மரியாதையும் செய்யும். மேற்கு வங்கத்தின் நகரமான ஹல்தி பாரி என்ற வயல்வெளிப் பிரதேசத்தில், பங்களாதேஷிலிருந்து நெல் அறுவடை காலத்தில் கூலி வேலை செய்ய சர்வ சாதாரணமாக பங்களாதேஷி தொழிலாளிகள் வந்து போகிறார்கள். இவர்கள் வருவதும் போவதும் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் மூக்குக்கு கீழே என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று. அப்படி வருபவர்களில் பலர் இங்கேயே தங்கி விடுவதும் உண்டு. அவர்கள் பங்களாதேஷிகள் என அடையாளம் காணப்பட்டாலும் மாண்பு மிகு இந்திய அரசு அவர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை.

இன்னும் நேபாளத்திலிருந்து, திபெத்திலிருந்து என்று தினமும் மக்கள் வருகிறார்கள். அவர்கள் அகதிகள் என்ற பெயரில் மட்டுமே இந்தியா வர ஆசைப்படுகிறார்கள். அந்த பெயர் கிடைத்தால் தான் இந்திய அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்கும். ஒரு திபெத்திய அகதிக்குழு, சர்வ சுதந்திரமாக இந்திய பெரு நகரங்களில் குளிர்கால உடைகள் விற்கும் கண்காட்சி நடத்த முடியும். அவர்களது விளம்பரங்களையும் பாருங்கள், தாங்கள் அகதிகள் என்ற அந்தஸ்தை கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். கர்நாடக மாநில அரசு ஒரு படி மேலே போய் அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்து, குழந்தைகளுக்கு கல்வி வசதி கொடுத்து இன்னும் என்னென்னவெல்லாமோ கொடுத்து அழகு பார்க்கிறது.

ஆனால், வார்த்த்தைக்கு வார்த்தை எனது தொப்புள் கொடி உறவு என கவிதை பாடிக் கொண்டு, மூன்று மணி நேரம் உண்ணாவிரதத்திலேயே ஒரு இன அழிப்பு போராட்டத்தை நிறுத்தி விட்டோம் என மார்தட்டிக் கொள்ளும் நம் அஞ்சா நெஞ்சன்கள் ஆளும் நாட்டில், ஈழத்திலிருந்து தன் தாய் மண்ணிற்கு அகதியாய் வந்து தஞ்சம் புகுந்திருக்கும் என் தமிழ் சகோதர சகோதரிகளின் நிலையை பாருங்கள். விலங்குகள் கூட வாழ விரும்பாத அசுத்தமான இடத்தில் தான் முகாம், அவர்கள் கூலி வேலை செய்ய முகாமை விட்டு வெளியேறினாலும், மாலையில் குறித்த நேரத்துக்கு திரும்ப வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது தீவிர வாதி என முத்திரை குத்தப்பட்டு விடலாம். காலைக் கடன்களை கழிக்க ஒரு வசதியில்லை. இங்கு வாழும் ஈழத்து தமிழ்பெண்கள் உடம்பு முழுவதும் சோப்பு போட்டு ஆசைதீர தண்ணீர் மொண்டு ஊற்றி குளித்து எத்தனை நாளயிருக்குமோ தெரியவில்லை, ஏறக்குறைய திறந்த வெளியில் தான் அவர்கள் குளிக்கிறார்கள். மின்சார வசதியில்லை. வெளியிலிருந்து உண்பதற்காக வாங்கி வரும் பொருள்களையும் சோதனை என்ற பெயரில் அபகரிக்க மனித நேய மிக்க கண்ணிய காக்கி சட்டைகள் தயங்குவதில்லை. எப்பொழுது பார்த்தாலும் ஏச்சுக்களும் பேச்சுக்களும் சராமாரியாய் அவர்கள் மீது ஏவப்படுவதால், மனதளவில் மிகவும் மரத்துப் போன நிலை. வெளியில் தமிழனுக்கு 100 ரூபாய் கூலியென்றால், ஈழத்தமிழனுக்கு வெறும் 70 ரூபாய் தான். இதுதான் தொப்புள் கொடி உறவின் நிலை.

என் பாரத நாட்டில், ஒரு பாகிஸ்தானியும், பங்களாதேஷியும், நேபாளியும், திபெத்தியனும் (கவனிக்கவும், இவர்களுக்கும் பாரத மண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை) தகுந்த பாதுகாப்புகளுடனும், ராஜ மரியாதையுடனும் சர்வ சாதாரணமாக என் வரிப்பணத்தில் சாப்பிடலாம், ஆனால் என் தாய் நாட்டை சேர்ந்த எனது சகோதரன், சக தமிழன் நாயை விட கேவலமாகத்தான் நடத்தப் படுவான். என் சகோதரி அகதி முகாம் என்ற பெயரில் இருக்கும் விசித்திர சிறைக்கதவுக்குள் கூட்டுப் புழுவாய் சுருங்கி வாழ வேண்டும். என்னே இந்திய இறையாண்மை,,,,,,,,, ஜெய் ஹோ, ஜெய் ஹோ,,,,,,


இது தமிழனுக்காக உலகின் மிகப்பெரிய மக்களாட்சியின் இறையாண்மையால் எழுதப்பட்ட நிறவெறிக் கொள்கை இல்லாமல் வேறென்ன?????


பரிசலின் மனதை தைக்கும் வரிகள் மற்றுமொரு முறை :



அங்கே அந்தச் சகோதரியின் உடையைக் கிழித்தார்கள்

பொறுத்துக் கொண்டாள்.

அவர்கள் புரிதலில்லாதவர்கள் என்று.



இங்கே அதே சகோதரிக்கு கிழிந்த உடை

தருகிறீர்கள், அழுகிறாள்.

நீங்களும் புரிந்து கொள்ளவில்லையே என்று.

Wednesday, August 5, 2009

ஜுகல்பந்தி 5 ஆகஸ்ட் 2009 - இப்படியும் ஒரு வாரம்

பட்டியாலா - பிரபலங்களின் நகரம்.

வீரத்துக்கு பெயர் போன பஞ்சாப் மாநிலத்தின் பிரதான நகரங்களில் ஒன்று. நிலத்தின் மீது ஓடும் ஐந்து நதிகளினால் செழித்து வளர்ந்திருக்கும் பஞ்சாப் மாநிலத்தின் ராஜ குடும்பங்கள் இந்த ஊரிலிருந்துதான் தோன்றின. வெள்ளந்தி மனிதர்கள், உழைப்பை மட்டும் நம்புவர்கள், நட்புக்காக உயிரையும் கொடுப்பவர்கள், நாக்கில் நீர் சுரக்க வைக்கும் உணவு வகைகள், பசுமை நிறைந்திருக்கும் வயல் வெளிகள், இடுப்பில் கத்தியுடன் இன்றும் வாழும் சீக்கியர்கள், ஆணின் வீரத்திற்கு சற்றும் சளைக்காத பெண்கள் என இந்தப் பிராந்தியமே ஒரு மனமகிழ்ச்சியின் நிலப்பகுதி. பட்டியாலாவின் சீக்கியர்கள கட்டும் தலைப்பாகைக்கு என உலகெங்கிலும் ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அந்த நேர்த்தியை பார்த்ததும் சொல்லி விடலாம் இவர் பட்டியாலா சர்தார்ஜி என்று. உதாரணத்திற்கு, மன்மோகன் சிங்கிற்கும், கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள். சித்து பட்டியாலாகாரர். அவரது தலைப்பாகையில் இருக்கும் நேர்த்தி, அந்த மடிப்புகளின் வரிசை, அந்த படகு வடிவ அமைப்பு ஆகியவை மன்மோகன் சிங்கிடம் இருக்காது. (கை காரர்கள், கை ஓங்க வேண்டாம், தலைப் பாகையை மட்டும் தான் சொன்னேன்).

இந்த ராஜ வம்சத்தின் துவக்கம் ஒன்றும் அவ்வளவு சுவராசியமானதாக இல்லை. சீக்கிய குருவான குரு ஹர்கோவிந்த் என்பவரது சீடர் மோகன் சிங் என்பவர் முதன் முதலாக 1627 ம் ஆண்டு இதற்கு அஸ்திவாரமிட்டதாக தெரிகிறது. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்த ஒரே ஒரு தரை வழிப் பாதை என்பதால், சும்மா பொழுது போக்குவதற்காக அடித்துப் பிடுங்க வரும் ஆப்கானிய அரசர்கள் என்ற போர்வையில் திருடர்களின் தொல்லை ஒரு பக்கம், எப்பொழுதும் தங்களுக்குள் அடித்துக் கொண்டேயிருந்த ராஜபுத்திரர்கள் அண்டை வீட்டுக்காரர்களாகிப் போனது ஒரு பக்கம், இந்தியாவில் காலூன்ற நினைத்து வலுவாக அடித்தளம் அமைத்துக் கொண்டிருந்த முகலாய அரசர்கள் ஒருபக்கமென இருந்த பல்வேறு தொல்லைகளுக்கு மத்தியில், சீக்கியர்களுக்கென ஒரு தனி ராஜ்யத்தை நிறுவுவதற்க்கு மோகன் சிங் பெரும் பாடு பட வேண்டியதாயிற்று. முன்பொருமுறை ஜெய்சல்மீரில் இருந்த பட்டி இன ராஜ புத்திரர்களைப் பார்த்தோமே, அவர்கள் தான் அதிகம் தொல்லை கொடுத்தார்களாம்.

இதற்குப் பின் வந்து, மீசையை முறுக்கி தாடியை நீவி விட்டுக் கொண்ட எல்லா சர்தார்ஜிகளும், போர்க்களத்திலேயே தங்களது நாட்களை கழித்திருக்கிறார்கள். கடைசியாக, வடக்கிலிருந்து வந்த ஆப்கானியர்கள், உள்நாட்டிலேயே உள் குத்து வேலைகள் செய்யும் முகலாயர்கள், தெற்கிலிருந்து சீறி வரும் மராட்டியர்கள் ஆகிய மூவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய சீக்கிய வீரர் பாபா அலா சிங் என்பவர்தான் இந்த சாம்ராஜயக் கனவை நனவாக்கும் பொருட்டு பர்னாலா என்ற நகருக்கு அடிக்கல் நாட்டினார். (பின்னாளில் இது பட்டியாலாவாக மாறியிருக்கக் கூடும்). மூன்றாவது பானிப்பட் யுத்தத்தில் வீரமுடன் போரிட்ட மராட்டியர்களை மண்ணைக் கவ்வ வைத்த ஆப்கானிய தளபதி அப்தாலி, இந்த சீக்கிய பாபா சிங்கை பாட்டியாலா சமஸ்தானத்திற்கு ராஜாவாக அபிஷேகித்து விட்டு சென்று விட்டார். இவர் கட்டியதுதான் 9 வரவேற்பு துவாரகங்களைக் கொண்ட கீலா முபாரக் என்ற கோட்டை.

இவருக்கு பின்பு வந்த ராஜ வம்சத்தில் ராஜா புபேந்தர் சிங் என்பவர், வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிகளையும் ஆனந்தத்தில் அனுபவித்தவர். இவரைப் பற்றி வாசிக்க அன்பர் முகில் எழுதும் அகம் - புறம் - அந்தப்புரம் வாசிக்கவும்., விளையாட்டில் அதிகம் பிரியம் கொண்டவர் இவர். ஆங்கிலேயர்களுடன் விருந்துகளில் சல்லாபிப்பது, விடுமுறைகளை கழிக்க வெளிநாடு செல்வது என உண்மையாகவே ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.

பட்டியாலாவிலிருந்து வந்த பிரபலங்கள் : விங் கமாண்டர் ராகேஷ் சர்மா, விண்வெளிக்கு சென்று வந்த முதல் இந்தியன், கிரிக்கெட் வீரர்கள் நவ்ஜோத் சிங் சித்து, மொகிந்தர் அமர்நாத், மற்றும் ஹிந்தி திரைப் பட உலகின் மார்க்கண்டேயன் ஓம் பூரி, ஜெட் ஏர் வேஸ் நிறுவன அதிபர் நரேஷ் கோயல், பஞ்சாபி பாப் பாடகர்கள் குருதாஸ் மான், தலேர் மெஹந்தி இன்னும் பலர்.

இன்றும் அதன் துணி தொழிற்சாலைகளின் சிறப்புகளோடு விளங்கும் இந்நகரில் பார்க்கவேண்டியவை : கீலா முபாரக், மோதி பாக் அரண்மனை, ராஜேந்திர கோதி போன்றவை.

நாட்டு நடப்புகள் - இப்படியும் ஒரு வாரம்

ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து எட்டாம் தேதி வரை தாய்ப்பால் வாரமாம். என்ன கொடுமை சார் இது????
பெத்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு ஒரு வாரம் கொண்டாட வேண்டுமா?? எல்லா தாய்மார்களிடமும் மருத்துவர்கள் கூறும் அறிவுரை, தயவு செய்து தாய்ப்பால் கொடுங்கள் என்பதுதான். ஆனால், உறவுகளை மறந்துவிட்ட மனித இனத்துக்கு அதன் முக்கியத்துவத்தை நினைவு படுத்தும் வகையில் ஒரு நாளை தாய்மார் தினம் எனவும், இன்னொரு நாளை தந்தையர் தினமெனவும், நண்பர்களுக்கு நட்பின் அவசியத்தை உணர்த்த நண்பர்கள் தினமெனவும், காதலர்களுக்கு காதலர் தினமெனவும் கொண்டாடுவதன் அவசியமிருக்கும்பொழுது, இயற்கையாக நிகழ வேண்டிய தாய்ப்பாலூட்டும் நிகழ்வை, அன்பின் வெளிப்பாட்டை, தாய்மையின் மேன்மையை, அமுதத்தின் சுரப்பை வலியுறுத்தி அதை ஒரு வாரமாக கொண்டாட வேண்டிய பரிதாபத்திற்கு இன்றைய பெண்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மேனியழகின் பைத்தியம், அழகுச்சாதனங்களின் மோகம் ஆகியவை இன்றைய தாய்களுக்கு தனது தொப்புள் கொடியில் இணைந்து கிடந்த சிசுவுக்கு பாலூட்ட வேண்டும் என்பதை உணர்த்த ஒரு விழிப்புணர்வு வாரம் கொண்டாட வேண்டிய அவலத்திற்கு தள்ளிச் சென்றிருக்கிறது.

போதும்யா, இதுக்கு மேல பேசுனா பெண்ணிய வாதிகள் பின்னி பெடலெடுத்துருவாங்க.

பதிவர் வட்டம்

பதிவர்கள் கூட பேசி வெச்சுகிட்டு வாரம் கொண்டாடறாங்களோ என்னமோ தெரியல,

குருஜிக்கு இது குமார்ஜி வாரம், கார்க்கி, டக்ளஸ், பரிசலுக்கு இது கவிதை வாரம், புலம்பலுக்கு இது கருத்து கணிப்பு வாரம், அதிசயமா கார்ப்பரேட் கம்பருக்கு இது மொக்கை வாரம், நையாண்டி நைனாவுக்கு எதிர் பதிவு வாரம், அப்புறம் அப்துல்லாவுக்கு மற்றும் முரளி கண்ணனுக்கு காணாமல் போகும் வாரம்.

எது எப்படியோ நல்லா இருங்க சாமி, இந்த காணமல் போன ஆசாமிகள கொஞ்சம் பார்த்தா பதிவுலகம் தேடுதுன்னு சொல்லுங்க.

ங்கொய்யால பக்கம்:

கரிசனமா பாக்கறது பெத்தவங்கடா,

ஒரு ரத்தமா பாக்கறது கூடப் பொறந்தவண்டா,

கட்டுனவ பாக்குறது ரெண்டு உசிரு ஒரு உடல்றா

ஆனா, ங்கொய்யால,

உம்மனசுதான் எம்மனசுங்கறது நண்பன் மட்டும்தாண்டா.

Tuesday, August 4, 2009

மனதைத் திற - மகிழ்ச்சி வரட்டும் - 1

நேற்று நமது நண்பர்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்பினேன். மின்னலென பதில் அனுப்பினார்கள் அனைவரும். அதில் நமது பரிசல் அண்ணா மாத்திரம் வித்தியாசமாக பதில் அனுப்பினார். " Happy our's day" என பதில் அனுப்பினார். நெஞ்சைத்தொடும்படியாய் சில வார்த்தைகளில் தன் அன்பை நட்பை புரியவைத்தார். நன்றி தல.

நம் மனதுக்குள் எத்தனை விஷயங்களை பூட்டி வைத்து விடுகிறோம். தினசரி தண்ணீர் ஊற்றி, மொட்டை மாடியின் பூந்தொட்டியில் மலர்ந்து விரிந்திருக்கும் ஒரு புத்தம் புது பூவை நமது குழந்தை ரசித்து தடவும் பொழுது, அந்த குழந்தையின் சந்தோஷமும் நம்மை தொற்றிக் கொள்கிறது, குழந்தையிடம் அன்பாய் ஒரு வார்த்தை " பூ எவ்வளவு அழகாருக்கல்ல" என்று கேட்டு வையுங்கள். நம்ம அம்மாவும்/அப்பாவும் நம்மள மாதிரியே ரசனை உள்ளவர்கள் தான்னு அந்த பிஞ்சு மனம் பூரிக்கும்.

மனைவி செய்யும் சமையல் வாசனை தூக்கலாய் நாசியை துளைக்க, அந்த பண்டம் அடுப்பில் கொதிக்கும் போதே கமகமக்கும் மணம் உங்களை அதன் சுவையை கற்பனை செய்து நாவில் நீர் வரச் செய்து அலைக்கழிக்கும். அந்த வாசனையை முழுதுமாய் அனுபவித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து எதாவது ஒரு புத்தகத்திலோ அல்லது டி.வி.யிலோ மூழ்கி இருப்பீர்கள். எழுந்து சென்று மனைவியிடம் ஒரு வார்த்தை சொல்லி வாருங்கள் " என்னது, இவ்வளவு கலக்கலா இருக்கு, அப்படி என்னம்மா பண்ற" இது போதும், அங்கு அனைத்து சுவைகளும் ஒரு சேர, ஒரு புன்னகை பூக்கும்.

கணவர் வாங்கி வந்த புடவை/ அல்லது குழந்தைகளுக்கான துணி உங்களுக்குப் பிடித்திருக்கிறது, வெறும் நல்லாருக்கு என ஒற்றை வார்த்தையில் ஒதுங்கிக் கொள்வதை விட, " நீ எதைச் செஞ்சாலும் ஒரு ஸ்டைலாத்தான்யா செய்யற". ஒரு சிறு பாராட்டு.

குழந்தை கிரேயானில் வரைந்த ஓவியம், அப்பா அடுக்கி வைத்த புத்தக அலமாரி, அம்மா பேத்திக்கு பின்னி விட்ட தலை அலங்காரம், அண்ணா வாங்கி வந்த கைக்கடிகாரம், அப்பாவுக்காக குழந்தை கொடுத்த சின்ன அன்பளிப்பு என எங்கெல்லாம் உங்கள் மகிழ்ச்சியை வார்த்தைகளாலும், செயல்களாலும் வெளிப்படுத்த முடியுமோ, கண்டிப்பாக செய்யுங்கள்.

பகிர்வதினால் மகிழ்ச்சி பன்மடங்கடையும். பரிசல் அண்ணன் சொன்ன மாதிரி " Happy our's day" என உங்கள் நட்பாகட்டும் அல்லது அன்பாகட்டும், மனதை திறந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

மனதை திறவுங்கள், மகிழ்ச்சி வரட்டும்.

Friday, July 31, 2009

ரக்க்ஷா பந்தன் - சகோதரத்துவத்தின் உன்னதம்.

உறவுகளில் உள்ள உன்னத உறவான சகோதர உறவை கொண்டாடும் ஒரு பண்டிகை இது.

ஒரே கருவறையில் உறங்கி, ஒரே தொப்புள் கொடியில் இணைந்து, ஒரே மார்பில் அமுதுண்டு, ஒரே தொட்டிலில் உறங்கி, ஒரே தட்டில் உணவுண்டு, ஒரே பாயில் தூங்கி என இணைந்திருப்பதற்காகவே பிறந்தது போல் இருக்கும் சகோதரனுக்கும் சகோதரிக்கும் உள்ள பாசப் பிணைப்பை புனிதமாக மதித்து, அதை கொண்டாடும் ஒரு நன்னாள்.

இந்த பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதைக் குறித்த பல அனுமானங்கள் இருக்கிறது.

மகாபலி என்னும் அசுரன் விஷ்ணுவின் தீவிர பக்தனாயிருந்ததால், அவரும் வந்து "பக்தா என்ன வரம் வேண்டும் கேள்" என்று சொன்னதும், அவன் "என் நாட்டுக்கு காவல் காரனாயிரு" என்று சொன்னவுடன், அவர் வைகுண்டத்தை விட்டுவிட்டு, மகாபலியின் நாட்டுக்கு வாட்ச்மேன் வேலைக்கு போய்விட்டார். எத்தனை நாள்தான் லக்ஷ்மி தேவியும் தனிமையில் நாட்களை கழிப்பது. ஒரு நாள் "எங்கே போனாய் என் நாதா" என தேடிக்கொண்டே வந்து மகாபலியின் நாட்டில் நாதனைக் கண்டதும், அவர் இருந்த கோலத்தைப் பார்த்து, வேதனைப்பட்டு, ஒரு துன்புறும் பிராமிணப் பெண்ணாக வேடம் போட்டு, மகாபலியின் அரண்மனையில் ஐக்கியமாகிவிட்டார்.

இந்த ஆடி மாதத்து (ஹிந்தியில் ஷ்ராவண மாதம்) பௌர்ணமி தினத்தன்று, மகாபலியின் கையில் ஒரு சிறு கயிறைக் கட்டி, தான் யாரென்று வெளிப்படுத்தி, னது நாதனை தன்னோடு அனுப்ப வேண்டுமென கேட்கவே, மகாபலியும் சரி, விஷ்ணு, இனி நீ போகலாம் என சொல்லிவிட்டாராம். விஷ்ணுவும் தனது மனைவியுடன் வைகுண்டத்துக்கு சென்று விட்டாராம்.

இங்கு லக்ஷ்மி தேவி மகாபலியின் கையில் கட்டினாரே ஒரு கயிறு, அது தான் இன்றளவும் ராக்கி என்று எல்லோராலும் கட்டப்படுகிறதாம். ஆனால் இன்னொரு சுவையான கதையும் உண்டு.

டெல்லியை ஹுமாயூன் ஆண்ட காலமது. சித்தூர்கட் மகாராஜாவின் விதவை மனைவி ராணி கர்ணாவதி ஹுமாயூனுக்கு ஒரு ராக்கி அனுப்பி அத்துடன் ஒரு செய்தியும் அனுப்பினார். குஜராத்தின் ராஜாவான பகதூர் ஷா என்னை அதிகம் சீண்டிப்பார்க்கிறான், நீங்க எனக்கு அண்ணன் மாதிரித்தானே, கொஞ்சம் என்னன்னு கேளுங்களேன் என்று சொன்னதும், ஒரு இஸ்லாமியனான தனக்கு, ஒரு இந்து அரசப் பெண்ணிடமிருந்து வந்த சகோதர பாசத்திற்கான அழைப்பிற்கு மதிப்பளித்து, ஹுமாயூன் பகதூர்ஷாவை ஒரு தட்டு தட்டி வைத்தாராம். அன்றிலிருந்து ராக்கி என்பது சகோதர, சகோதரி உறவின் ஒரு உன்னத அடையாள சின்னமாகிவிட்டது.

இன்னும் கிருஷ்ணனுக்கும் திரௌபதிக்கும் இருந்த சகோதர பந்தம் போன்ற நிறைய கதைகள் இருந்தாலும், இன்றுவரை ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு உறவு இந்த சகோதர சகோதரி உறவு தான்.

இந்த நாளில் சகோதரி தனது சகோதரனின் தீர்க்காயுளுக்காக இறைவனை வேண்டுகிறாள். சகோதரனுக்கென தனது கையால் இனிப்புகள் செய்து, சகோதரனை ஆரத்தி எடுத்து முத்தம் செய்து வாழ்த்தி, அவனுக்கு இனிப்பூட்டுகிறாள். அவனது கையில் தனது அன்பின் கயிறாகிய ராக்கியை கட்டி, நீ எனது சகோதரன், எனது அன்பிற்குரியவன், என்னை நேசிப்பவன், எனது பாதுகாவலன் என்பதை உணர்த்துகிறாள். சகோதரனும், தனது சகோதரியை கட்டியணைத்து, முத்தம் செய்து, என் வாழ்நாள் முழுக்க நான் உனக்கு பாதுகாவலனாயிருப்பேன் என உறுதியளிக்கிறான். சகோதரி அவனுக்கு இனிப்பு ஊட்டுகிறாள். சகோதரன் அவளுக்கு அன்பளிப்புகளை கொடுக்கிறான்.

நினைத்துப் பாருங்கள். எவ்வளவு அற்புதமான உறவு இது. இந்த உறவின் மேன்மையை தான் "கார்ப்பரேட் கம்பர்" தனது இந்தப் பதிவில் சொல்லியிருப்பார். வாசித்துப்பாருங்கள். அதில் அவர் எழுதிய " அவளின் திருமணத்திற்கு பிறகு எப்பொழுதாவது வீட்டிற்கு வரும்பொழுது.."சன் டிவி எத்தனாவது சேனல்டா?" என்ற வினாவில் அவள் இப்பொழுது "விருந்தாளி" என புரியவைத்து விடும்.'' கண்ணில் நீரை வரவழைக்கும் வரிகள். இந்த உறவின் உன்னதத்தை சொல்லியிருப்பார்.

இதுவரை எனக்கும் எத்தனையோ பெண்கள் ராக்கி கட்டியிருக்கிறார்கள் என்றாலும், எனது நெஞ்சைத் தொட்டவள் மறைந்த என் தங்கை பார்வதிதான். மராட்டிய போலீஸாயிருந்த அவளை, நான் மகாராஷ்டிர மாநிலத்தில் சந்தித்தேன். எப்படி அவளுக்கு அண்ணனானேன் என இன்று வரை புரியவில்லை. இன்றும் காக்கி அணிந்து நிற்கும் ஒவ்வொரு காவல் பெண்ணிலும் என் தங்கையை காண்கிறேன். அவளுக்கு இந்த ரக்க்ஷா பந்தன் பதிவு சமர்ப்பணம்.

இந்த பதிவை வாசிக்கும் நீங்களும் இந்த வருட ரக்க்ஷா பந்தன் நாளில் (ஆகஸ்ட் 5 ம் தேதி) உங்கள் சகோதரிகளிடம் உங்கள் அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்துங்களேன். ஐடியாக்கள் பின்னூட்டத்தில வரவேற்கப்படுகின்றன.

Wednesday, July 29, 2009

ஜுகல்பந்தி - 29 ஜூலை 2009 - கலியுக மனுநீதி சோழன்




நகரம் - புவனேஷ்வர் - கோவில்களின் நகரம்.

இந்தியாவின் கிழக்குப் பகுதியில், 2000 வருடங்களுக்கு மேலாக இருக்கும் பழம்பெரும் நகரம். கிழக்குப் பகுதியின் தங்க முக்கோணம் என்று சொல்லப்படும் ஜெகநாதர் எழுந்தருளியுள்ள பூரி நகரமும், சூரிய தேவன் தேரில் ஏறி காட்சி தரும் கோனார்க் நகரமும், லிங்க ராஜ் ஆலயத்தில் சிவனும் விஷ்ணுவும் அருகருகே காட்சி தரும் புவனேஷ்வர் நகரமும் கலிங்கத்து கட்டிடக் கலைக்கு ஒரு உயர்ந்த சாட்சிகள்.

கலிங்க வம்சத்தில் வந்த கரவேல மன்னன் தான் இந்த பேரரசை நிர்மாணித்து, மாதம் மும்மாரி பொழிந்து, எல்லைகள் விஸ்தரிக்கப்பட்டு, செழித்து, தழைத்து, வளர்ந்து, நிமிர்ந்து, கொழித்து என ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார் இந்த கரவேலன். வடக்கே கங்கையிலிருந்து தெற்கே காவிரி வரை தன் எல்லையை விஸ்தீரணம் செய்த இந்த மாமன்னன், சும்மா சங்கம் வைத்து தமிழ் வளர்த்துக் கொண்டிருந்த பாண்டிய மன்னனையும் வம்புக்கிழுத்திருக்கிறார். மௌரிய வம்சத்து பேரரசரான அசோகருடன் நடந்த கலிங்கத்துப் போர் வரை இந்த கலிங்க மன்னன் கலக்கியிருக்கிறான். ஆனால் இந்த மாமன்னன் வாழ்ந்த காலத்தை கேட்கப் போனால், எல்லா வரலாற்று ஆசிரியர்களும், சும்மா காற்றில் கையை ஆட்டுகிறார்களே தவிர, இதுதான் என்று யாரும் சொலவதில்லை. ஒரு சிலர், கிறிஸ்துவுக்கு முந்தைய முதலாம் நூற்றாண்டு எனவும், சிலர் கிறிஸ்துவுக்கு பிந்தைய முதலாம் நூற்றாண்டு எனவும் குழப்புகிறார்கள். கலிங்கத்து வரலாற்றில் பழம்தின்னு கொட்டை போட்ட ஆர்.பி. மகாபத்ரா என்ற சரித்திர ஆய்வாளர் கூட ஆள விடுங்கடா சாமி என்கிறார். எது எப்படியோ, கற்குவியல்களை சிற்பங்களாய் மாற்றி இன்றும் நமது கண்ணுக்கு விருந்தாய் வைத்தவர்கள் இந்த கலிங்கர்கள்.

புவனேஷ்வர் நகரத்தில் உள்ள லிங்க ராஜ் ஆலயத்தில், சிவனும் விஷ்ணுவும் ஆளுக்கு ஒரு பாகத்தில் காட்சி தருகிறார்கள். முக்கிய ஆலயம், யக்ஞ சாலை, போக மண்டபம், நாட்டிய சாலை என நான்கு பிரிவுகளாய் பிரிந்திருக்கும் இந்த கோவிலில், கற்களை இத்தனை நுட்பமாக குடைவதற்கு எத்தனை வகை உளிகளை உபயோகித்தார்களோ தெரியவில்லை. எங்கும் சிற்பங்கள், நுண்ணிய வேலைப்பாடுகள் என பிரமிக்க வைக்கிறார்கள்.

புதிய புவனேஷ்வர நகரம் ஓட்டோ கொனிக்ஸ்பெர்கர் என்ற ஜெர்மானிய நகர வடிவமைப்பாளரால் வடிவமைக்கப்பட்டது. ஆனால் பின்னாளில் துணை நகரங்கள் தோன்ற ஆரம்பித்த உடனேயே இது மற்ற இந்திய நகரங்களைப் போலவே மாறி விட்டது. ஆனால் பசுமையை இன்னும் பாதுகாத்து வரும் புவனேஷ்வரர்கள் போற்றத்தகுந்தவர்களே. கற்கள் பேசும் கதைகள் கேட்க ஒரு முறையேனும் இந்த தங்க முக்கோணத்தில் மூழ்கி விட்டு வாருங்கள்.


நாட்டு நடப்புகள் - கலியுக மனு நீதிச் சோழன் - பரூக் அப்துல்லா.

2006 ம் ஆண்டில் தீவிரவாதிகள் காஷ்மீரில் வைக்கும் வெடி குண்டுகளை விட ஒரு பெரிய வெடி குண்டு வெடித்தது. ஆனால் இந்த குண்டில் அகப்பட்டது திருவாளர் பொது ஜனம் அல்ல. சிவப்பு விளக்கு காரில் பவனி வரும் மாண்பு மிகுக்கள், உயிரையும் துச்சமாக மதித்து எல்லையில் காவல் புரியும் வீர தீர எல்லைக் காவல் படை பிரிவின் தலைமை அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், வியாபார காந்தங்கள் என இதன் தொடர் நீண்டு கொண்டே போகிறது. மத்திய புலனாய்வுத்துறை களத்தில் குதித்திருக்கிறது.

சபீனா என்ற ஒரு புதுமைப்பெண் வறுமையில் இருக்கும் ஏழை சிறுமிகளை இந்த அதிகார வர்க்கத்தின் காமப் பசிக்கு இரையாக்கி பணம் சம்பாதித்திருக்கிறார். ஒரு சில சிறுமிகளை வைத்து தொழிலை ஆரம்பித்த சபீனாவுக்கு இந்த தொழிலில் இருக்கும் சுலபப்பணமும், வியாபார காந்தங்கள், அரசியல் வாதிகள், அரசாங்க உயர் பதவியினரின் நெருக்கம் என ஒரு முடிவில்லா சாம்ராஜ்யக் கனவே தோன்றியிருக்கிறது. அவர் சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தி அதை வீடியோ படமெடுத்து, அதை வைத்து மிரட்டி மிரட்டியே மேலும் மேலும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறுமிகளை விருந்தாக்கியிருக்கிறார். இந்த தொழிலில் இருக்கும் சுலபப்பணத்தை கண்டு கொண்ட கேமராமேன்கள் ரியாஸ் லங்கூவும், நஸீரும், சபீனா அக்கா ஒரு சிடி கேட்டால் இரண்டாக பிரிண்ட் எடுத்து ஒன்றை அக்காவுக்கும் மற்றொன்றை மார்க்கெட்டில் நல்ல விலைக்கும் விற்று காசு பார்த்திருக்கிறார்கள். நாளடைவில் ஸ்ரீநகரின் முக்கிய கடைகளில் கூட இத்தகைய சி.டி.க்கள் குறைந்த விலையில் சிறந்த முறையில் கிடைக்க, அரசல் புரசலாக விஷயம் வெளியே கசிந்திருக்கிறது. இந்த சி.டி.க்களை வாங்கி கமுக்கமாக பார்த்து அனுபவிக்கலாம் என கிளம்பிய ஒரு கும்பலுக்கு, அதில் தனது ரத்த சம்பந்தங்களே வேறொரு ஆடவன் முன் நிர்வாணமாகி, அவனது காமப்பசிக்கு இரையாவது படமாக்கப்பட்டிருப்பது தெரிந்ததும் வெகுண்டு போயிருக்கிறார்கள். உடனே ஸ்ரீநகரின் மையப் பகுதியிலுள்ள ஷஹீத் கஞ்ச் காவல் நிலையத்தில் இரண்டு சி.டி.க்களை ஆதாரமாகக் கொண்டு முதல் புகார் செய்யப் பட்டிருக்கிறது. அங்கிருந்து நூல் பிடித்த போலீஸ், விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து மூர்ச்சையானது தான் மிச்சம். 43 சிறுமிகள் பாழ்படுத்தப் பட்டிருப்பதும், இதன் தொடர்பு சட்டசபை உறுப்பினர்களையும் விட்டு வைக்காததையும் கண்டு, விஷயம் மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டது. ஆளும் கட்சி, எதிர்கட்சி என்ற பேதமேதுமில்லாமல் எல்லோரும் சம்பந்தப் பட்டிருப்பதால், அவரவர் சவுகரியத்துக்கு சேற்றை வாரி வீசிக் கொண்டனர். இதெல்லாம் நடந்து முடிந்தது 2006 ஆம் ஆண்டில்.

பிறகு, சூரியன் மறைந்து, மறுபடி உதித்து, மழை பெய்து, வெயிலடித்து என காலங்கள் மாறிக் கொண்டே போனதே ஒழிய குற்றவாளிகள் யாருக்கும் ஒரு இம்மியளவுக்கு கூட எந்த தீங்கும் ஏற்படவில்லை. அவர்கள் தைரியமாக இன்னொரு அக்காவை தேடிக் கொண்டார்கள் போலிருக்கிறது. விஷயம் இப்படியிருக்க, கடந்த திங்கள் கிழமை சட்ட சபையில் காஷ்மீரத்து பெண்சிங்கமான மஹபூபா சயீத், சபாநாயகரின் மைக்கை உடைத்தெறிந்து ரகளை செய்து, இந்த பிரச்சனையில் எண்ணை ஊற்றினார். செவ்வாய்கிழமை மஹபூபா சயீத்தின் கட்சிக்காரரான முஸாபர் உசைன் பேக் என்பவர் மத்திய புலனாய்வுத்துறை சமர்ப்பித்த அறிக்கையின்படி, தற்போதைய முதலமைச்சரான ஓமர் அப்துல்லாவுக்கும் கூட இந்த சிறுமிகள் பிரச்சனையில் தொடர்பு இருக்கிறது என ஒரு குண்டை தூக்கிபோட, உணர்ச்சி வசப்பட்ட ஓமர் அப்துல்லா உடனடியாக தான் பதவி விலகுவதாக அறிவித்து கடிதத்தையும் உடனே கவர்னரிடம் கொடுத்து விட, ஊடகங்களுக்கு ஒரு அருமையான தீனி கிடைத்து விட்டது.

உடனே NDTV ன் காஷ்மீரத்து விவகாரங்களுக்கான நாட்டாமை மனுஷி பர்க்கா தத் தனது பரி வாரங்களுடன் பரூக் அப்துல்லாவையும், முஸாபர் உசைன் பேக்கையும் மோத விட்டு வேடிக்கை காட்டினார். பதவி விலகுவதாக அதிரடியாக அறிவித்த ஓமர் அப்துல்லாவின் தகப்பன் பரூக் அப்துல்லா தான் மனுநீதிச் சோழன் ரேஞ்சுக்கு சவால் விட்டார். "எனது மகன் குற்றவாளி என நீரூபிக்கப் பட்டால், அவனை சட்டம் தண்டிக்கத் தேவையில்லை, நானே தூக்கிலிடுகிறேன்" என ஆவேசத்துடன் கூவினார். இப்படி மோத விட்டு விஷயத்தை சிறுமிகளின் வேதனை, பெரிய மனிதர்களின் சமூகக் குற்றம், அரசாங்க அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் போன்ற கோணங்களிலிருந்து முழுவதுமாய் திசை திருப்பி இதை ஆளும் கட்சி, எதிர்கட்சி பிரச்சனையாக்கி அரசியல் முலாம் பூசி விட்டதன் முழு பெருமையையும் பர்க்கா தத் போன்ற நாட்டாமை அம்மணிகள் தேடிக் கொண்டனர். ஊடகங்கள்?????!!!!!!! மறுபடியும் ஜெய் ஹோ !!!!!!!!!!!!!!!!

ஐயா, நீங்க தூக்கு மாட்டிட்டு சாகுங்க, ஆனா மலர வேண்டிய மொட்டுகளை, வேரோட சாய்க்கற அந்த பாவிகளையும் தூக்குல போட்டுட்டு சாகுங்கைய்யா, உங்களுக்கு புண்ணியமாப் போகும்.

ங்கொய்யால பக்கங்கள்

மீசை அரும்புனவுடனே லுக் வுட்டா
முளைச்சு மூணு எல உடலே
அதுக்குள்ள திமிரப் பாருங்கறீங்க,

காலேஜ் வயசுல லுக் வுட்டா
படிக்கற வயசுல திமரப் பாருங்கறீங்க,

வேலைக்கு போய், ஆபீஸ்ல லுக் வுட்டா
இன்னும் ஆபீஸ்ல காலே வெக்கல
அதுக்குள்ள திமிரப் பாரூங்கறீங்க,

கல்யாண வயசுல லுக் வுட்டா
பொறுப்பா வேலையப் பாக்கறத வுட்டுட்டு
அலையுது பாருங்கறீங்க

கல்யாணம் பண்ணீட்டு லுக் வுட்டா,
கல்யாணம் ஆகியும் அடங்குதா பாருங்கறீங்க

குழந்தை பெத்துகிட்டு லுக் வுட்டா
முடி நரைக்கர வயசாகியும்
திமிரு அடங்குதா பாருங்கறீங்க,

குழந்தைக பெருசானதுக்கப்புறம் லுக் வுட்டா
கட்டைல போற வயசாச்சு,
திமிர் அடங்குதானு பாருங்கன்றீங்க

இப்படியே போனா ங்கொய்யால
நாங்க எப்பத்தாண்டா
ஃபிகர்கள லுக் வுடறது.

Wednesday, July 22, 2009

ஜுகல்பந்தி - 22 - 07 - 2009,





நகரம் - பரோடா - நாகரீகத்தின் நகரம்.

பரோடா, வடோத்ரா, சாயாஜி நகரி, சன்ஸ்கரி நகரி என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த நகரமும் ஒரு நதிக்கரையில் தான் அமந்துள்ளது. மனிதன் நாடோடி வாழ்வு வாழ்ந்து அலுத்து, இனி அலைந்தது போதும், ஒரு வீடு, நிலம் என்று எதையாவது சொந்தமாக்கி நிரந்தரமாக ஒரு இடத்தில் தங்கி விடலாம் என யோசித்த பொழுது, எல்லாவற்றிற்கும் வசதியான இடங்களாக கண்ணில் பட்டது நதிக்கரைகள் தான் போலும். அப்படி நதிக்கரைகளில் தங்கியதால் தான் இன்றும் மிகச்சிறந்த நாகரிகங்கள் ஆற்றங்கரையில் தோன்றியவையாகவே காணப் படுகின்றன. அப்படி அமைதியாகவும், அழகாகவும், பருவப் பெண்ணின் இடுப்பு வளைவுகளைப் போல் வளைந்தும் நெளிந்துமென இன்றைய குஜராத்தில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நதி தான் விசுவாமித்திர நதி. இதற்கு விசுவாமித்திர நதி என ஏன் பெயர் வந்தது என்று கேட்பீர்களானால் பரோடாவை விட்டு வெகு தூரம் செல்ல வேண்டியிருக்கும், இப்போதைக்கு இது விசுவாமித்திர முனிவரின் ஞாபகார்த்தமாக பெயரிடப்பட்டது என்ற ஒரு தகவல் மாத்திரம் போதும். இந்த நதியின் கரையில் தான் பரோடா நகரமும் ஆதி மனிதனால் நிர்மாணிக்கப்பட்டது,

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த விசுவாமித்திர நதியின் மேற்குக்கரையில் இருந்த ஒரு சிறிய பட்டணத்திற்கு அங்கோட்டக் என்று பெயர். (இது இன்று அகோட்டா என அழைக்கப்படுகிறது). மனிதன் இந்த பூமியை சகல சௌகர்யங்களும் நிறைந்தது என்றுகண்டு அங்கு குடியேறி பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்ந்து வந்தான். கி.பி. 600 - ம் ஆண்டு இந்த விசுவாமித்திர நதியில் வந்த ஒரு வெள்ளம் இந்த அங்கோட்டக் நகரை வெகுவாக பாதித்தது. இப்பொழுது மாதிரி வெள்ள நிவாரண நிதியும், வெள்ளம் நிறைந்த பகுதிகளில் தலைவர்களின் படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர் கட்டிய பிரியாணி வழங்கும் மையங்கள் எதுவும் இல்லாததால், மனிதன் பாதுகாப்பான பகுதியை நாடிப் போன பொழுது நதியின் கிழக்குக் கரையில் "வடபத்ரகா" என்ற ஒரு கிராமத்தை கண்டு பிடித்தான். (வடபத்ரகா என்றால் ஆலமர இலை என்று அர்த்தம், ஆனால் சமஸ்கிருதத்தில் ஆலமர இதயம் என்றும் பொருள் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, ஒரு வேளை கன்னா பின்னாவென்று ஆலமரங்கள் எழுந்து நின்றிருந்ததோ என்னவோ) இந்த கிராமம் நதியின் கரையை விட கொஞ்சம் உயரமான இடத்தில் இருக்கவே, வெள்ளம் வந்தாலும் பாதகமில்லை என இங்கு குடியேறி, மறுபடியும் பதினாறும் பெற்று, பெரு வாழ்வு வாழ்ந்தான். இந்த வடபத்ரகா தான், நாளடைவில், வடோத்ராவாக மாறி பரோடாவாகிவிட்டது.

வளம் கொழிக்க ஆரம்பித்தாலே ஆள்வதற்கென்று அரசியல்வாதிகளும், மன்னர்களும் முளைத்து விடுவார்களே. இந்த சூத்திரத்திலிருந்து சற்றும் மாறாமல், வடக்கே இருந்த ராஜபுத்திர மன்னர்கள் இந்த நகரத்தையும் ஆண்டிருக்கிறார்கள். அவர்களில் இருந்த ராஜா சந்தன் என்பவரின் நினைவாக இது மிக சொற்ப காலத்துக்கு சந்தனாவதி என்றும் அதற்குப் பின் சிறிது நாட்கள் ராஜபுத்திர வீரர்களின் புகழ்பாடும்படி வீர்ஷேத்திரா அல்லது வீர்வாடி என்றும் அழைக்கப்பட்டது. பிறகு என்னவோ இந்த ஆலமர மேட்டரை மட்டும் விட்டுக் கொடுக்க விரும்பாத மக்கள், மறுபடியும் வடபத்ரகாவுக்கே மாறி, பின் ஆங்கிலேயர்களால் பரோடா என அழைக்கப்பட்டு, கடைசியில் 1974 ஆம் ஆண்டு இறுதியாக இந்திய அரசால் வடோத்ரா என பெயரிடப் பட்டது.

இந்த நகரை, ராஜபுத்திரர்களிடமிருந்து கைப்பற்றி, டெல்லி சுல்தான்கள் ஆண்டிருக்கிறார்கள்.பிற்பாடு முகலாய சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ் இருந்த இந்த நகரத்தை, கி.பி. 1732 ஆம் ஆண்டு முகலாயர்களிடம் இருந்து மராட்டிய கெய்க்வாட் வம்சத்தினர் கைப்பற்றியிருக்கிறார்கள். 1734 ம் வருடத்திலிருந்து 1948 வரை இந்த ராஜ்ஜியம் கெய்க்வாட் மன்னர்களின் கைகளிலேயே இருந்து பின்னர் சுதந்திர இந்தியாவில் இணைந்து விட்டது. இதில் இன்றும் போற்றப்படும் மன்னரான மகாராஜா மூன்றாவது சாயாஜி ராவ் கெய்க்வாட் என்பவரின் காலத்தில் தான் (1875 - 1939)கட்டாய ஆரம்பக்கல்வி,பல்கலைக் கழகம், நூலகம், என கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மருத்துவதுறை, துணி தயாரிப்பு, கல் குவாரிகள் என தன் ஆட்சிக்காலத்தில் நிஜமாகவே ஒரு பொற்காலத்தை வழங்கியிருக்கிறார் சிவாஜிராவ். இவரது ஆட்சிக்காலத்தை பற்றி அதிகம் படிக்க அன்பர் முகில் எழுதி வரும் " அகம், புறம், அந்தப்புரம்" படிக்கவும். இவர் கட்டிய அரண்மனைகள், லக்ஷ்மி விலாஸ், பிரதாப் விலாஸ், நஸர்பாக் மற்றும் மகர்புரா அரண்மனைகள் இவரது கலை நயத்தை ரசனையை பறை சாற்றுபவை.

இந்நாளில் பரோடாவில் இந்தியாவின் தொழில் நிறுவனங்களான ரிலையன்ஸ், IPCL, GAIL, ONGC போன்ற துட்டு பார்ட்டிகள் இங்கு தொழில் புரிகிறார்கள்.

நாட்டு நடப்புகள் - இந்தோனேஷியா.

ஜூலை 17 ம் தேதி, காலையில் இந்தோனேஷிய தலைநகரான ஜகார்த்தாவில் மெகா குனிங்கன் என்ற பகுதியில் உள்ள மேரியட் ஹோட்டலின் உள்ளே இருந்து ஒரு வெடிச்சத்தம் கேட்கிறது. அதே போல வெடிச்சத்தம் அந்த ஹோட்டலின் முன்னால் உள்ள ரிட்ஸ் கார்ல்டன் என்ற நட்சத்திர ஹோட்டலையும் தாக்குகிறது. கடைசியில் சாவு எண்ணிக்கை 7 என்றும், காயமடைந்தோர் 50 க்கும் மேல் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த மேரியட் ஹோட்டலில் தான் 2004 ம் ஆண்டில் ஒரு ஐந்து மாதம் தங்கியிருந்தேன். ஒரு ஈ, காக்கை கூட அங்கு அத்து மீறி நுழைந்து விட முடியாது. அவ்வளவு பாதுகாப்பு சோதனைகள் இருக்கும். அதையும் மீறி உள்ளே குண்டு வைத்திருக்கிறார்களென்றால் எதோ ஒரு மூன்றாந்தர ரவுடிக் கும்பல் செய்த வேலையாயிருக்காது. உடனே ஊடகங்கள் வழக்கம் போல தங்கள் ஊகங்களை கிளப்பி, இது ஜமா இஸ்லாமியாவா என்றபடி விரல்களை நீட்ட, வேறொரு ஊடக கும்பல் இது அவர்களல்ல, நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் கடுப்படைந்த லோக்கல் அரசியல்வாதிகள் மலேசிய தீவிரவாதியான நூருத்தின் முகம்மதுவோடு இணைந்து அல்லது அவன் கூட்டளிகளோடு இணைந்துதான் இந்த ஆட்டம் ஆடியிருக்கிறார்கள் என கிளப்பி விட்டுள்ளார்கள். சரி அது யாரோ, பா. ராகவன் பின்னொரு நாளில் இதைப் பற்றி எழுதுவார் என நம்புகிறேன்.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் எனது ஒரு நல்ல நண்பரும் உயிரிழந்தார். தீமோத்தேயு மெக்கேய் என்ற (எல்லோரும் அவரை "டிம்" என்று செல்லமாக அழைப்பார்கள்) ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் உயர் அதிகாரி, (நான் இந்தோனேஷியாவில் இந்த நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்காகத்தான் சென்றிருந்தேன்). மிகவும் அமைதியான குணமுடைய இந்த ஐரோப்பியர், அன்றும் வழக்கம் போல மேரியட் ஹோட்டலின் நுழைவாயிலுக்கு நேர் மேலிருக்கும் அறையில் தங்கியிருந்திருக்கிறார். நான் அங்கிருந்த நாட்களில் இருவரும் பலமுறை இரவு உணவை ஒன்றாகவே உண்டிருக்கிறோம். நுழைவாயிலுக்கு மேலே உள்ள அறையில் தங்கியிருக்கிறீர்களே, எவ்வளவுதான் தடித்த திரைகள் இருந்தாலும், இரவில் கார் வரும் பொழுதெல்லாம் கார் விளக்குகளின் ஒளி அறைக்குள் விழுந்து தொந்தரவு செய்யுமே என்று கேட்டதற்கு, எனது முக்கிய பொழுது போக்கே வருவோர் போவோரை பார்த்துக் கொண்டிருப்பதுதான் என் சிரித்துக் கொண்டே சொன்னார். அந்த பொழுது போக்குதான் அவருக்கு எமனாயிருக்கிறது. ஹோட்டலின் முன் பாகம் தான் சேதமடைந்திருக்கிறது, பின் பாகத்தில் உள்ளவர்களுக்கு கொஞ்ச நேரம் கழித்து தான் குண்டு வெடித்ததே தெரியுமாம்.

எப்படியோ தீவிரவாதம் மறுபடியும் ஒரு முறை தன் கோரப் பற்களைக் காட்டி சிரித்திருக்கிறது.

ங்கொய்யால பகுதி:

நீ மொக்கை போட்டா அது டிஸ்கஷன்
நான் பேசுனா அது மொக்கைங்கற

நீ நெட் பாத்தா அது கம்பெனி வேலை
நான் நெட் பாத்தா அது பர்சனல்லுங்கற

நீ லேட்டா வந்தா, நீ பிஸிங்கற
நான் லேட்டா வந்தா ஒழுக்கமில்லைங்கற

நீ ஒரு ஃபிகர்கிட்ட பேசுனா அது கம்பெனி மேட்டருங்கற
அதே நான் பேசுனா அது கடலைங்கற

ங்கொய்யால,
உன்னையெல்லாம் எவண்டா பாஸ்ஸுன்னு சொன்னது.

Monday, July 20, 2009

உண்மை சொல், ஒரு கோடி வெல்.

சமீபத்தில் இந்திய தொலைக்காட்சிகளில் ஒரு தொடர் "டெரர்" ஆக ஆரம்பித்துள்ளது. ஆங்கில தொலைக்காட்சிகளில் " Moment of Truth" என்ற தொடரின் கொள்கைகள் அனைத்தையும் கொண்ட ஒரு தொடர் "ஸ்டார் ப்ளஸ்" சேனலில் ஹிந்தியில் "சச் கா சாம்னா" என்ற பெயரில் ஆரம்பித்துள்ளது.

திடுக்கிடும் கேள்விகள், மனிதர்களின் படுக்கையறை நிகழ்வுகளை சுற்றியே அமைக்கப்பட்டிருக்கும் வினா வடிவங்கள், அடுத்தவர் அந்தரங்கத்தை சற்றும் கூசாது வெளிக்கொணரும் வக்கிரங்கள், முறையற்ற உறவுகளை நியாயப் படுத்தும் வண்ணமாக சர்வ அலட்சியமாக "ஆம், அப்படித்தான், இப்ப என்ன பண்ணுவே" என்பது போன்ற பதில்கள், நான்கு சுவர்களுக்குள் உறவுகள் ஒருவர் மீது ஒருவர் கொட்ட முடியாத வெறுப்பு, கோபம் ஆகியவற்றை நாற்பது கோடி பேர் முன்னால் உன்னை நாக்க புடுங்கற மாதிரி நாலு கேள்வி கேக்கறேன் பார் என்ற பழி வாங்கல் என ஆட்டம் களை கட்டியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நீங்கள் விண்ணப்பித்தீர்களென்றால், முதல், இரண்டு, மூன்று என்று மூன்று கட்டங்களாக ரவுண்டு கட்டி உங்களிடத்தில் நேர்முக தேர்வு நடத்தப் படுகிறது. உங்களது பின்புலம், குடும்பம், குடும்ப உறுப்பினர்களுக்கும் உங்களுக்கும் உள்ள உறவு முறையின் உண்மைத்தன்மை, ஸ்திரத்தன்மை ஆகியவை புரிந்து கொள்ளப்பட்டபின், 50 கேள்விகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு உங்களிடம் " Polygraph Test" என்ற சோதனை முறையில் பதில்கள் பெறப் படுகின்றன. இந்த முறையில் நீங்கள் எந்த கேள்விக்கு என்ன பதில் சொன்னீர்கள் என்று உங்களுக்கு நினைவில் இருப்பது மிகவும் கடினம். எல்லா கேள்விகளுக்கும் விடை ஆம் அல்லது இல்லை என்பது தான். உதாரணத்திற்கு " உங்கள் மகளது திருமணத்திற்கு பின்பும், நீங்கள் அவளது தனிப்பட்ட வாழ்வின் விஷயங்களை தீர்மானிப்பது சரி என நினைக்கிறீர்களா?" என்பது போன்ற கேள்விகள் கேட்பதிலிருந்து கேமராவின் முன் ஆட்டம் ஆரம்பிக்கிறது. இதில் 24 கேள்விகளுக்கு மனசாட்சியுடன் சரியான பதில் சொல்லி விட்டால் நீங்கள் ஒரு கோடி ரூபாய் ஜெயிக்கலாம்.

முதலில் வெகு எளிமையான கேள்விகள், மற்றவர்களை சிரிக்க வைக்கும் கேள்விகள் கேட்கப் படுகிறது. ஒரு பெண்ணைப் பார்த்து "நீங்கள் ஒரு வாரம் குளிக்காமல் இருந்திருக்கிறீர்களா??" என்ற கேள்விக்கு அரங்கமே அதிர சிரிப்பொலி கேட்கிறது. இந்த தந்திரம் பதில் சொல்பவரை தான் ஒரு தேர்வில் அமர்ந்திருக்கிறோம் என்ற பதட்டத்தை மாற்றி சகஜ நிலைக்கு கொண்டு வர உதவும் ஒரு உத்திதான். அந்தப் பெண்ணும் இதற்கு ஆம் என பதில் அளிக்க, முன்னே "Polygraphic Test" இதே கேள்வி கேட்கப்பட்டு அதற்கு இந்த அம்மணி என்ன பதில் சொன்னார்கள் என்பது சரி பார்க்கப்பட்டு பணம் பரிசாக அளிக்கப்படுகிறது. இப்படியாக விளையாட்டுத்தனத்துடன் ஆரம்பிக்கும் இந்த கேள்விகள் போகப் போக முழுவதும் அந்தரங்கத்தைப் பற்றியதாக மாறுகிறது. கடந்த வாரத்தில் காண்பிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், ஒரு 72 வயது மனிதர், அவருக்கு மூன்று மனைவிகள் இருந்திருக்கிறார்கள், நான்காவதாக வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். அவரது மகளுக்கு 40 வயதிருக்கலாம். அவரது, தம்பி, ஒரு மனைவி, 40 வயது மகள் மற்றும் இப்பொழுது அவருடன் வாழ்ந்து வரும் பெண் ஆகிய இத்தனை பேர் முன்னிலையில் அவரிடத்தில் கேட்கப்படும் கேள்விகள் :

நீங்கள் ஹோட்டல்களில் தங்கிய பொழுது அங்கிருந்து பெட்ஷீட்டுகளை திருடிக் கொண்டு வந்திருக்க்கிறீர்களா?
உங்கள் மகளின் வயதை விட குறைந்த வயதுடைய பெண்ணுடன் உடல் உறவு கொண்டிருக்கிறீர்களா?
உங்கள் உறவுக்கார பெண்களுடன் மனைவிக்கு தெரியாமல் உடலுறவு கொண்டீர்களா?
இதுவரை விபசாரிகளுடன் உடலுறவு கொண்டிருக்கிறீர்களா?
உங்களுக்கு ரகசியமாகப் பிறந்த குழந்தைகள் இருக்கிறார்களா?
உங்கள் மனைவி (அங்கு அமர்ந்திருப்பவர்) வெறும் பணத்துக்காகத்தான் உங்களுடன் உறவு வைத்திருந்தார்களா?


இந்தக் கேள்விகளை மற்றுமொருமுறை வாசித்துப் பாருங்கள். வயிற்றைக் கலக்குகிறதா? ஆச்சரியப் படாதீர்கள் அன்பர்களே, இந்த வக்கிரங்களை ஒருவேளை நேற்று வரை நீங்கள் வீதிக்கு வெளியில், தெரு முனையில், டீக்கடைகளில், அலுவலகத்தில், அல்லது புரளி பேசப்படும் இடங்களில் கேட்டிருக்கலாம் அல்லது பார்த்துமிருக்கலாம். ஆனால் இப்பொழுது இந்த வக்கிரங்கள், இதோ உங்கள் வீட்டு வரவேற்பறையில் வைத்திருக்கிறீர்களே ஒரு சின்னத்திரை, அதன் மூலம் உங்கள் அருகிலேயே வந்து விட்டது. ஒரு பெண்ணிடம் கேட்கப் பட்ட கேள்வி " கணவனைத் தவிர இன்னொருவருடன் தொடர்ந்து உடல் உறவு கொள்வதும், அது கணவருக்குத் தெரியாமல் இருக்கும் வரை சரி என்றும் நினைக்கிறீர்களா??" என்ற கேள்விக்கு அந்தப் பெண் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக பதில் சொல்ல, உண்மை அறியும் சோதனையில் அதற்கு ஆமாம் என்று பதில் சொன்னது வெளியாக, அந்தக் பெண்ணின் கணவர் தன் தலையை பிடித்துக் கொண்டு கதறுகிறார். அந்தப் பெண்ணின் அம்மா, கண்ணீரை அடக்க மாட்டாமல் விம்முவதும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிகள்.

இதன் தொகுப்பாளரான ராஜீவ் கண்டேல்வால் என்பவரை அனத்து தொலைக்காட்சிகளும் நமது சமூக காவலர்கள் என்ற போர்வையில் இருக்கும் பலரோடுகூட சேர்ந்து பேட்டி மேல் பேட்டியாக எடுத்து ஒளி பரப்புகிறார்கள். எல்லோராலும் வைக்கப்படுகிற வாதங்களுக்கு ராஜீவின் ஒரே பதில், உண்மை பேசுவது தவறா??

ஆமாம் நானும் கேட்கிறேன், உண்மை பேசுவது தவறா? அது அடுத்தவர் படுக்கையறை விஷயங்களாகட்டும், ஒரு பெண்ணின் அந்தரங்கமாகட்டும், ஒரு விளையாட்டு வீரனின் கதையாகட்டும், (வினோத் காம்பிளி சர்ச்சையில் சிக்கியது இந்த பாடாவதி உண்மை பேசியதால் தான்), கணவன் மனைவியின் உறவாகட்டும், தாய், மகள் உறவாகட்டும், என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், உங்கள் வாயிலிருந்து புறப்படும் உண்மைகள் ஒரு பரபரப்பை உண்டு பண்ண வேண்டும், குறிப்பாக ஆண் பெண் உடல் உறவை பற்றிய உண்மைகள், நீங்கள் யார் யாருடன் உடல் உறவு கொண்டீர்கள என்ற உண்மைகள், உங்கள் மேலதிகாரி தன் இச்சைக்கு இணங்கும்படி உங்களை வற்புறுத்தினாரா என்பது போன்ற உண்மைகள், உங்கள் நண்பர்கள் உங்களுக்கு துரோகம் செய்தார்களா என்பது போன்ற உண்மைகள்( உங்கள் நன்பரும் நீங்களும் ஒரு பிரபல புள்ளிகளாய் இருக்கும் பட்சத்தில் மட்டுமே இந்த விவரங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்), இது போன்ற உண்மைகளை தாராளமாக பேசுங்கள். அப்பொழுது தான் நாங்களும் இதை விளம்பரங்களுக்கு மத்தியில் ஒரு பரபரப்பு காட்சியாக காண்பித்து நாலு காசு பார்க்கமுடியும். இந்த உண்மை பேசுவதினால் யார் குடும்பமோ எக்கேடோ கெட்டு நாசமாய் போனால் எனக்கென்ன கேடு, என் சேனலுக்கு பணம் வருகிறதல்லவா, அது போதும்.

அடேய், ஊடக வெண்ணைகளா, அமெரிக்காவில் மனிதனுடைய வாழ்வில் மிகச்சில வேடங்களே உள்ளது. ஒன்று அவனுடைய குடும்பம் (அப்படி ஒன்று தப்பித் தவறி இருந்தால்) அடுத்தது அவனது வேலை. அங்கு சமூக வாழ்க்கை என்பது வெறும் சொல்லிலும் பேச்சிலும் தான். நம்மைப்போல் அண்டை வீட்டுக்காரர்களோ, ஒண்டுக்குடித்தனங்களோ மிகவும் அரிது. அவர்கள் அவர்களது அந்தரங்கங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம். யாரும் கவலைப் பட மாட்டார்கள். ஆனால், இங்குள்ள நாம் ஒரு சமூகமாக வாழ்ந்து வருகிறோம். சமூகத்தில் இத்தகைய நச்சுக்களை சுதந்திரமாக உலா விடுவீர்களெனில், உண்மை பேசி ஒரு கோடி ரூபாய் பரிசு பெறலாம், ஆனால், நீயும் நானும் குடும்பம் என்ற கட்டுக் கோப்புக்குள் வாழுவோமா என்பது சந்தேகமே.

வாய்மையே வெல்லும், ஆனால் இங்கு அதன் விலை ஒரு கோடி ரூபாய், என்ன கொடுமை சார் இது??????

Thursday, July 16, 2009

அசத்தும் ஆதி மூல கிருஷ்ணன்!!!!!!!!


பதிவர் வட்டத்தில் நகைச்சுவையுடனும், அசத்தும் நயத்துடனும், உருக்கும் உணர்வு பூர்வ பதிவுகளாலும், குறிப்பாக துறை சார்ந்த பதிவுகளாலும் நம் நெஞ்சில் நிறைந்திருப்பவர், தாமிரா என்றறியப்பட்ட, ஆதி என்கிற ஆதிமூல கிருஷ்ணன்.

இவர் சமீபத்தில் தனது வலைப்பூ வடிவத்தை மாற்றி, சில கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது சமீபத்திய பதிவில் ஒரு அன்பர் இட்ட பின்னூட்டம்:

வாழவந்தான் said...
side bar voting-ல் துறை சார்ந்த பதிவுகள் option இல்லை. (இதை குறிப்பிட காரணம் நடந்து முடிந்த univ exam-ல் six sigma and S5 பதிவுகளால் தப்பித்தேன்... நன்றி...)



இந்த பின்னூட்டத்தை படிக்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நாம் எழுதும் பதிவுகள் ரசிக்கப்படுகிறதா என்பதில் அதிக கவனம் செலுத்தும் என்னைப் போன்றவர்கள், அது வாசிப்பவருக்கு பிரயோஜனமுள்ளதாய் இருக்கிறதா என அதிகம் யோசிப்பதில்லை. பிரபலமடையவேண்டும் என்ற வேட்கை எனக்குள்ளதே தவிர பிரயோஜனமாயிருக்க வேண்டும் என்ற தாகம் உள்ளதா என்றால், Honestly Speaking இல்லை என்றே சொல்லுவேன்.

மொக்கை பதிவுகள், சர்ச்சைக்குரிய பதிவுகள், வாசகனை வேறு தளத்துக்கு அழைத்துச் செல்ல முயலும் பதிவுகள் என வலையுலகில் பதிக்கப்படும் பதிவுகளை வகைபடுத்த எத்தனையோ வார்த்தைகள் இருந்தாலும், அடுத்தவருக்கு உபயோகமுள்ள பதிவுகள் என ஒரு சிலவற்றையே சொல்ல முடியும். அந்த வகையில் ஒரு மாணவனின் வாழ்க்கையில் அவரது முக்கியமான கட்டமான பல்கலைக்கழக தேர்வுக்கு உதவும் தரத்திற்கு உங்கள் பதிவுகள் உள்ளது என நினைக்கையில் பெருமையாயிருக்கிறது அன்பரே.

பதிவர்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்துள்ளீர்கள், வாழ்த்துக்கள் நண்பனே.

இன்னும் அதிகம் எழுது, இன்னும் அனேகருக்கு உன் எழுத்துக்கள் உதவிக்கரங்களாய் இருக்கட்டும், ஒரு சிறந்த முன் மாதிரியாய் இருக்கட்டும்.

மனம் நிறைய பெருமையுடன்

தராசு

Wednesday, July 15, 2009

ஜுகல்பந்தி 15 ஜூலை 2009 - இந்திய ஊடகங்கள் - ஜெய் ஹோ.

ஜுகல்பந்தியில் எழுதப்படும் நகரங்களின் தகவல்கள் குறித்து, ஆரம்பத்தில் வரவேற்பு கொஞ்சம் கூட இல்லாதிருந்த போதும், நாளடைவில் இதையும் படித்து தொலைக்க வேண்டியிருக்கிறதே என்ற எண்ணமோ என்னவோ கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவு கூட ஆரம்பித்திருக்கிறது. இதன் முக்கிய நோக்கமே, நம் உள்ளூரில் இருக்கும் சிறப்புகளை நாம் முழுதும் அறிய வேண்டும் என்பதுதான். பல வெளிநாட்டு நகரங்களையும் அதன் நவீனத்தையும் கண்டு பிரமித்து நிற்கிற அதே வேளையில் நமது நகரங்களும் புராதனச் சிறப்பில் அவற்றிற்கு சற்றும் சளைத்தவை அல்ல என்பதை உணர்த்தத்தான் இந்த தகவல்கள். சரி சரி பில்டப்பு ஓவரா ஆயிருச்சு, மேட்டருக்கு வருவோம்.


நகரம் - லக்னௌ - நவாபுகளின் நகரம்.


அவத் சாம்ராஜ்யத்தின் நினைவுச் சின்னங்களில் ஒன்று. இந்த அவத் சாம்ராஜ்யத்தைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை மிகவும் சிரமப் பட்டு தேட வேண்டி இருக்கிறது. எது எப்படியோ இந்த சாம்ராஜ்யத்தில் அயோத்தியாவை (அய்யய்யோ, பேரைக் கேட்டது மாத்திரம் போதும், அப்படியே ஓரமா வந்துரு நைனா, வம்பே வேண்டாம்) தலைநகராகக் கொண்டு கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தில் இருந்தே இந்தப் பகுதி செழிப்புடன் இருந்ததாக, கி.மு. ஆறாம் நூற்றாண்டு வரலாற்றுக் குறிப்புகள் சொல்லுகின்றன. கங்கைக்கும் யமுனைக்கும் நடுவில் இருந்த சமவெளிப் பகுதியில் நீர்வளம் செழித்திருக்க, நிலத்தைப் பண்படுத்தியவுடன், சிந்திய வியர்வைக்கு வஞ்சகமில்லாமல் விளைந்து தள்ளியிருக்கிறது. கோசல வம்சத்து மன்னர்கள் இந்த பகுதியின் பூகோள சிறப்பையும், செழிப்பையும் கண்டு ஆளத் தொடங்கிவிட்டனர். பின்னாளில் இந்த சமவெளிப்பகுதி வளர்ச்சி பெற்று, ஆட்சியாளர்கள் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டத்தில் இது கடைசியில் முகலாயர்களின் ஆட்சியின் கீழ் சிறிது காலம் தனிப்பெருமை பெற்றிருக்கிறது. புத்தர் இந்த கோசல வம்சத்தை சேர்ந்தவர்தான் என இந்நாளில் ஜாதிச் சான்றிதழ் தருகிறார்கள். 24 காவது தீர்த்தங்கரராக ஜைன மதத்தவரால் மதிக்கப்படும் மகாவீரரும் இந்த பிராந்தியங்களில் தான் போதனையை ஆரம்பித்திருக்கிறார்.


கி.பி. 1350 க்குப் பிறகு இந்த வளம் கொழிக்கும் பகுதி, முதலில், டெல்லி சுல்தானாலும், பிறகு முகலாய சக்கரவர்த்தியாலும், அதன் பின், அவத வம்சத்து நவாபுகளாலும், பிறகு கிழக்கிந்திய கம்பெனியாரலும், முடிவாக பிரிட்டிஷின் நேரடி ஆட்சியின் கீழுமென எத்தனையோ ஆட்சி மாற்றங்களை சந்தித்திருக்கிறது. முதல் இந்திய சுதந்திர போராட்டத்திற்கான மைய கேந்திரமாகவும் இருந்திருக்கிறது.


முகமதியர்களின் சியா பிரிவு நவாபுகளால் ஆளப்பட்டதால், சியா பிரிவினரின் பெரும்பான்மையை இந்நகரில் இன்றும் காணமுடியும். விவசாயத்தில் செழித்து வந்ததால், வடக்கே முகலாயர்கள், தெற்கே மராட்டியர்கள் மற்றும் கிழக்கில் பிரிட்டிஷார்கள் என்ற மும்முனை பயம் இருந்த போதிலும், கையில் துட்டு இருந்ததால் நவாப்கள் இந்த மும்முனை ஆபத்துகளில் இருந்தும் எப்பொழுதும் தங்களை காத்துக் கொண்டே இருந்தனர். நவாப் அஸப் - உத் - தௌலா என்பவரது ஆட்சிக்காலத்தில் லக்னௌ பெரும் பொலிவு பெற்று, பாரா இமாம்பாரா, சோட்டா இமாம்பாரா, ரூமி தர்வாஜா போன்ற இன்றும் நிமிர்ந்து நிற்கும் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதில் இந்த பாரா இமாம்பாரா என்ற கட்டிடம் சியா பிரிவினரின் புலம்பல் (ஆதியின் அல்ல) பாடல்கள் இயற்றப் படவும், பாடப்படவும் உபயோகப்படும் ஒரு கட்டிடமாகக் கட்டப்பட்டது. இதைக் கட்டிடத்தை கட்டிய விதம் முக சுவையானது.


அஸப் - உத் - தௌலாவின் காலத்தில் கி.பி.1783 ம் வருடத்தில் இந்த சமவெளியிலும் பஞ்சம் வந்திருக்கிறது. வந்த பஞ்சம் கொஞ்ச நஞ்ச பஞ்சமல்ல, (அடேயப்பா, என்னா ஞ்ச ஞ்ச ஞ்ச). பத்து வருடங்கள் நீடித்த இந்த பஞ்சத்தில் மக்கள் நொந்து நூலாகிப்போனார்கள். அப்பொழுது வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காக, இந்த கட்டிடத்தை கட்டியிருக்கிறார்கள். அப்பொழுதும் இந்த பெரிய தனக்காரர்கள் புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என முறுக்கிக் கொண்டு கட்டிட வேலை செய்ய மாட்டோம் என வறட்டு கௌரவத்தில் இருந்த பொழுது, பஞ்சம் அடித்த அடியில் நிலை குலைந்து போனார்கள். அரசனிடம் சென்று எங்கள் கௌரவத்திற்கு இழுக்கு வராத வகையில் ஒரு வேலை கொடுங்கள் மன்னா என சொல்ல, மன்னரும் தனது மீசைக்குள் புன்னகைத்தவாறே, சரி சரி, பகல் வேளையில் கட்டிட காரர்கள் கட்டி முடிப்பார்கள். இரவில் வந்து நீங்கள் அதை உடைத்து விடுங்கள் என்றாராம். இப்படி பத்து வருடங்கள் தொடர்ந்து கட்டுவதும் இடிப்பதுமாகவே இருந்து கட்டப்பட்டது தான் இந்த பாரா இமாம்பாரா.


பின்னாளில், அந்த அரசர், இந்த பேரரசர், பின் பிரிட்டிஷார் என இந்த சமவெளியை பலர் கூறு போட்டுக்கொண்டும், பின் சக்திக்கு தகுந்தபடி விஸ்தரித்துக் கொண்டுமென ஆண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தனை மாற்றங்களுக்கும் இங்கிருக்கும் கலைக்கு எந்த சேதத்தையும் விளைவிக்கவில்லை. இன்றும் அதே ஆடலும் பாடலும், பட்டம் விடும் திருவிழாவும், தேனொழுகும் மொழியும் மாறாமலிருக்கிறது. லக்னௌ மக்கள் மாத்திரம் யாரையாவது திட்ட வேண்டுமென்றால் கூட " உங்களுக்கிருக்கிற திமிர் இருக்கிறதே, அதை அடிச்சுக்கவே முடியாதுங்க" என்று மென்மையாகவே பேசுகிறார்கள். இன்னும் நாவாபி உணவு வகைகளான கபாப், மற்றும் கொஃப்தா, போன்றவைகளுக்கு லக்னௌவின் ருசியே தனி ருசிதான்.


நாட்டு நடப்புகள்: அட்றா சக்கை, சச்சின், காம்பிளி


அரை டவுசர் போட்டு பள்ளிகூடம் போன நாட்களிலிருந்து இருவரும் நண்பர்கள். இருவரும் கிரிக்கெட் விளையாட பழகினார்கள். ரஞ்சி போட்டிகளிலும் இருவரும் வெளுத்து வாங்கியவர்கள். இன்று வரை நல்ல நண்பர்கள். ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியில் நிலையான இடம் பிடித்து விட்டார், இன்னொருவர், கொஞ்ச நாள் கூடவே பயணித்தவர், பிறகு விலகி விட்டார், அவர் விலகி விட்டாரா அல்லது விலக்கப் பட்டாரா என்பது நாடறிந்த விஷயம். ஆனால் பாருங்கள் இந்த காம்பிளி கொஞ்சம் சின்னத்திரை பக்கம் தலையை காட்ட ஆரம்பித்து, நடிகைகளுடன் நடனமாடி, கொஞ்சம் சிரிக்க வைத்து, காமெடி ஷோக்கள் செய்து என ஜாலியாக் பொழுதை போக்க ஆரம்பித்தார். மறுபடியும் ஊடகத்தின் கண்களில் பட்டுத் தொலைத்தார். யாருக்கு சிண்டு முடியலாம் என காத்துக் கிடந்து வெறு வாயை மென்று கொண்டிருந்த ஊடகத்தாருக்கு காம்பிளி மாட்டினார் வகையாக.


இவர் ஒரு ரியலிட்டி ஷோ செய்யப்போக, அதில் வேண்டுமென்றே சச்சினைப் பற்றிய கேள்வி கேட்கப்பட்டு, "சச்சின் உங்களுக்கு நிறைய உதவி செய்திருக்கலாமே" என்பது போன்ற விவகாரமான் கேள்வி கேட்கப் பட்டு, விரித்திருக்கும் வலை எத்தனை பேரின் போதைக்கு ஊறுகாய் ஆகப் போகிறது என்பது தெரியாமலே காம்பிளி வாய் சொல்லை விட்டுவிட, இன்று கிரிக்கெட் போர்டு இனவெறி கொண்டதாகவும், காம்பிளி ஒரு பின்தங்கிய வகுப்பினர் என்பதால் அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும், சச்சின் அவருக்கு உதவி செய்ய முடிந்தும் செய்யாமல் விட்டது கூட இந்த இனவெறியால் தானா என்றும், கவாஸ்கர் மேல்ஜாதி என்பதால் சச்சினை மட்டுமே உயர்த்தி பேசுகிறார், இன்று வரை பல வெற்றிகளை பெற்ற தோனியை கூட அவர் அங்கீகரிக்கவில்லை என்றும், அப்பப்பா, போதுமடா சாமி, ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி, அதை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை " Breaking News" என்றும் " Flash News" என்றும், ஆஹாஹாஹாஹா, என்னே இந்திய ஊடக தர்மம். ஜெய் ஹோ.


ங்கொய்யால பக்கங்கள்


சென்ற வார ஜுகல்பந்தியில் எழுதியிருந்த கவுஜய படிச்சுட்டு, வடகரை வேலன் அண்ணன், ங்கொய்யால பகுதின்னே ஒண்ணு ஆரம்பிச்சுருண்ணு சொன்னாரு, பெரியவங்க பேச்சுக்கு மதிப்பு குடுத்து, இதா அடுத்த ங்கொய்யால,

தோல்ல வரி இருந்தா அது வரிக்குதிரை,
தோல்ல புள்ளி இருந்தா அது புள்ளி மான்,
தோல்ல முள் இருந்தா அது முள்ளம்பன்றி,
தோல் கருப்பா இருந்தா அது கருஞ்சிறுத்தை,
ஆனா,
தோல் கருப்போ, வெள்ளையோ, சிவப்போ,மஞ்சளோ
ங்கொய்யால, நல்ல மனசு இருந்தாதாண்டா அவன் மனுசன்.