1835 ம் ஆண்டில் மேற்கு வங்கத்தின் மிட்நாப்பூர் நகரில், ஆங்கிலேய அரசில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு இந்திய அதிகாரியின் வீட்டில் பிறந்தவர் பங்கிம் சந்தர சட்டர்ஜி. 1891 – ஆம் ஆண்டு வரை, நீதிபதியாக ஆங்கிலேய அரசாங்க உத்தியோகம் பார்த்து விட்டு, தினமும் சாரட் வண்டியில் வீட்டுக்கு போய் சகதர்மிணி செய்து வைக்கும் மீன்குழம்பை ஒரு பிடி பிடித்து விட்டு, ஒழுங்காக தூங்கப் போன இந்த மனிதருக்குள்ளும், ஆங்கிலேய எதிர்ப்பு என்பது மனதுக்குள் கனன்று கொண்டிருந்தது. கவிதைகள் எழுதுவதிலும், புனைவுகள் எழுதுவதிலும் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த இந்த மனிதர், 1882 ஆம் ஆண்டு “அனந்தாமத்” என்ற ஒரு புத்தகம் எழுதினார். ஆங்கிலேயர்களின் வரி வசூலிக்கும் கொள்கைக்கு எதிராக இந்து மற்றும் இஸ்லாமிய துறவிகளால் நடத்தப் பட்ட “துறவிகளின் போரையும்”, அந்நாட்களில் (1770 களில்) வங்காள பகுதியில் தலைவிரித்தாடிய பஞ்சத்தின் கோர விளைவுகளையும் மையப் படுத்தி எழுதிய ஒரு புனைவு இது.
பஞ்சத்தின் பிடியிலிருந்த வங்கத்தில் மனிதர்கள் எல்லாவற்றையும் விற்று விட்டு, கடைசியில் மனிதர்களையும் விற்கத் தொடங்கினார்கள். ஆனால் வாங்குவோர் தான் யாரும் இல்லை. கல்யாணி என்ற வங்கப் பெண் தன் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு ஆள் பிடித்து விற்பவர்களின் கண்களில் தப்பித்து ஓடுகிறாள். ஆனால் வாணலிக்குத் தப்பி நெருப்பில் விழுந்த கதையாய், அவள் ஆங்கிலேய சிப்பாய்களின் காமக் கண்களில் பட்டு விடுகிறாள். உதவி உதவி என்று கதறி அந்த பெண், ஒரு ஆற்றங்கரையில் மூர்ச்சையானதும், அவளை காப்பாற்றும் ஒரு இந்துத் துறவி அவளை பாதுகாப்பு கருதி துறவிகள் கூட்டமாய் குழுமியிருக்கும் இடத்தில் மறைத்து வைக்கிறார். ஏற்கெனவே ஆங்கிலேயர்களின் அடாவடி வரி வசூலிப்பினால் தங்களது புண்ணிய தலங்களுக்கு சுதந்திரமாக சென்று வர முடியாமல் வெறுப்படைந்திருந்த துறவிகள், கல்யாணிக்கு ஆங்கிலேயர்களால் ஏற்பட்ட அவமானத்தின் கதையை கேட்டதும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெகுண்டு எழுகிறார்கள் . இதன் விளைவாக நடந்தது தான் துறவிகளின் போர். இதில் நிராயுத பாணிகளாய் வெறும் கோபத்தையும் ஒற்றுமையையும் மாத்திரமே ஆயுதங்களாக கொண்டு போரிட்ட துறவிகளால், ஆங்கிலேய ராணுவம் மற்றும் ஆயுத பலத்துக்கு முன்பாக சில மணி நேரம் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை. கலகத்தை அடக்கி விட்டோம் என சில ஆங்கில அதிகாரிகள் இங்கிலாந்து அரசியின் கையால், தங்கள் சட்டைகளில் மெடல் குத்திக் கொண்டார்கள். இப்படியாக போகும் அந்தப் புனைவில் இந்திய நாட்டை ஒரு அன்னையாக உருவகப் படுத்தி அந்த அன்னையின் சிறப்புகளை தனக்கே உரிய சமஸ்கிருத மற்றும் வங்க மொழி புலமையின் சிறப்பில் எழுதிய வரிகள் தான் “வந்தே மாதரம்”.
1890களின் பின்பகுதியில், ஆங்கிலேயர்களின் அட்டகாசம் அதிகமாகி, இங்கிலாந்து ராணிக்கு தங்களது விசுவாசத்தைக் காட்ட “ O God, Save the Queen” என்ற பாட்டை இந்தியர்கள் ஒவ்வொருவரும் பாடவேண்டும் என கட்டாயப் படுத்தினார்கள். எங்கேயோ இருந்து வந்து நம்மீது ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்துக் காரனின் ராணி நன்றாயிருக்க வேண்டுமென நான் ஏன் வேண்ட வேண்டும் என ஒவ்வொரு இந்தியனும் வெகுண்டு கொண்டு இருந்த நேரத்தில், 1896 ஆம் ஆண்டு கல்கத்தாவில் அப்போதைய தலைவர் ரஹிமத்துல்லா சயானி என்பவரின் தலைமையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், ராணியின் பாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நம் பாரத தாயைப் பற்றிப் பாட வேண்டும் என தீர்மானித்து முதன்முதலாக வந்தே மாதரம் பாடப் பட்டது. பிறகு இந்தப் பாட்டின் முழு அர்த்தமும், அந்த வர்ணனை வரிகளில் வெளிப்படும் இந்திய மண்ணோடுள்ள உளம் சார்ந்த உணர்வுகளும், ஒவ்வொரு இந்தியனையும் ஈர்க்க, மக்கள் கூடும் எல்லா இடங்களிலும் வந்தே மாதரம் ஒலித்தது. குறிப்பாக நாம் அறிய வேண்டியது, அப்பொழுது சுதந்திரப் போராட்டத்தில் வெகுவாக ஈடுபட்டிருந்த இந்து மற்றும் இஸ்லாமிய மக்களிடையே எந்த வித கருத்து பேதங்களுமின்றி இந்தப் பாடல் பாடப் பட்டு வந்தது.
இதற்கிடையே இஸ்லாமிய அறிவாளர்களால் ஜமாய்த் உலேமா – ஏ – ஹிந்த் (இந்திய அறிவாளிகள் குழுமம்) என்ற ஒரு அமைப்பு, 1919 – ம் ஆண்டு தோறுவிக்கப்பட்டது. இவர்கள் தங்கள் பங்குக்கு ஆங்கிலேய எதிர்ப்பை வெளிப்படுத்த “கிலாஃபத் இயக்கம்” என்ற ஒன்றை நடத்த இந்த இயக்கமும் இஸ்லாமிய மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. பிற்காலத்தில் இவர்கள், கொள்கை ரீதியில் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைந்து கொண்டனர். இவர்களில் பலர் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்த வேளையில், இவர்களுக்குள்ளேயே ஒரு தனி பிரிவினர் பிரிவினைக்கு ஆதரவாகவும் கிளர்ந்தனர். இந்த பிரிவினை ஆதரவாளர்கள் எல்லாம் சேர்ந்து பின்னாளில் ஜமாய்த் உலேமா – ஏ – இஸ்லாம் (இஸ்லாமிய அறிவாளிகள் குழுமம்) என்ற தனிக் குழுவாய் பிரிந்து போய் விட்டனர்.
இந்திய அறிவாளிகள் குழுமம் அன்றிலிருந்து இன்றுவரை, தங்களை இந்திய இறையாண்மையை முழுதும் மதிப்பவர்களாகவும், மதச் சார்பின்மைக்கு முழுதும் ஆதரவு தருபவர்களாகவும் தான் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தில் அவர்களும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். மற்றும் பிராந்திய ரீதியில் அங்கங்கே இருக்கும் மாநில கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல்களில் பங்கேற்று, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து அரசியல் செய்து என இந்திய அரசியலின் ஒரு அங்கமாகவே திகழ்கிறார்கள்.
இப்படி சாதுவாக குல்லாய் அணிந்து கொண்டும், தாடியை நீவிக் கொண்டு புத்தகங்களை புரட்டிக் கொண்டும், ஐந்து முறை தொழுது கொண்டும் இருந்த இந்த அறிவாளிகள், சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் த்யோபந்த் என்ற இடத்தில் நடந்த அறிவாளிகள் மாநாட்டில் நிறைவேற்றிய ஒரு தீர்மானம் தான் இந்திய அரசியலில் ஒரு புதிய சர்ச்சையை தொடங்கி வைத்திருக்கிறது. தியோபந்தில நடந்த மாநாட்டில் நமது நாட்டுக்கோட்டை வீட்டுக்காரரான மாண்புமிகு ப. சிதம்பரம் அவர்கள் அறிவாளிகளின் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொள்ள, அந்த நேரம் பார்த்து அறிவாளிகளின் அறிவு கோக்கு மாக்காக வேலை செய்து, இஸ்லாமியர்கள் வந்தே மாதரம் பாடக் கூடாது என ஃபத்வா வெளியிட்டு விட்டார்கள். இதென்னடா வம்பு, எக்குத் தப்பாக வந்து மட்டிக் கொண்டோமோ என நினைத்து, சிதம்பரமும் மாநாட்டில் பேசும் பொழுது, மிகுந்த எச்சரிக்கையுடன், இந்த ஃபத்வா மேட்டரை தொடாமலே பேசி விட்டு ஆளை விடுங்கடா சாமி என ஓடி வந்து விட்டார். இங்குதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.
இப்பொழுது இருக்கிற அரசியல் நிலைமையில், இறங்கு முகத்தில் இருக்கும் பாஜக திரும்பிய பக்கமெல்லாம் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தனிக் கொடி பிடிக்க தயாராகி வருகிறார். அத்வானியின் தலைமை என்பது கட்சிக்கு எதிர்பார்த்த கவர்ச்சியை மக்களிடம் தர முடியவில்லை. ஜஸ்வந்து சிங் தனியாக ஜின்னா புராணம் பாடி விட்டு பிரிந்து விட்டார். கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கையைப் பிசைந்து கொண்டிருக்கும் வேளையில், நடந்து முடிந்த மாநிலத்தேர்தல்கள் அனைத்திலும் மண்ணைக் கவ்வ வேண்டியதாகி விட்டது. தென்னாட்டில் கால் ஊன்றக் கிடைத்த ஒரே ஒரு இடமான கர்நாடகத்தில், ரெட்டி சகோதரர்கள் தரும் குடைச்சல் வேறு திருகு வலியாய் மாறிக் கொண்டிருக்கிறது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என திரிந்தவர்களுக்கு, இந்த விஷயம் அகப் படவே வானுக்கும் மண்ணுக்கும் எகிறத் தொடங்கி விட்டார்கள்.
உடனே சிதம்பரம் பதவி விலக வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர், பிரவீண்பாய் தொகாடியா அறிக்கை விடுகிறார். சிதம்பரம் மௌனமாய் இருந்தது ஏன் என கேள்விகள், உருவ பொம்மை எரிப்புகள் என அரசியல் மேடை களை கட்டியுள்ளது. ஆனால் ஃபத்வா கொடுத்த அறிவாளிகள் சங்கம் என்ன காரணத்தால் இந்த தடையை விதித்தார்கள் என்றால், இதில் ஒரு பெண் தெய்வத்திற்கான துதிப்பாடல் வரிகள் வருகின்றன, அந்த வரிகளை உச்சரிக்கும் எந்த ஒரு இஸ்லாமியனும் அல்லாவை தூஷிக்கிறான் என திருவாய் மலர்ந்தருளி விட்டார்கள். இதற்கு இந்த அறிவாளிகள் கூட்டத்திலேயே ஒரு சிறு எதிர்ப்பு கிளம்பினாலும், அது திருவிழாக் கூட்டத்தில் ஒலித்த ஒரு குருட்டுப் பாடகனின் குரலாய் அமுங்கிப் போனது.
இந்த அறிவாளிகளுக்கு சில கேள்விகள்:
1919 ம் ஆண்டிலிருந்து நீங்களும் நெஞ்சை நிமிர்த்தி இந்தப் பாடலை பாடினீர்களே, அப்பொழுதெல்லாம் ஒளிந்து கொண்டிருந்த பெண்தெய்வம், திடீரென வெளிவந்தது ஏன்?
இறையாண்மைக்கும் ஆன்மீகத்துக்குமுள்ள வித்தியாசம் அறிவாளிகளான உங்களுக்கு கடுகளவாவது புரியாமல் போனது ஏன்?
ஃபத்வா கொடுப்பது என்பது ஆன்மீக காரணங்களுக்காக மாத்திரம் தானா அல்லது அரசியல் காரணங்களுக்காகவும் கூடவா?
வகுப்புவாத அரசியலின் அருவருப்பான விளைவுகளை சற்றே மறந்து முன்னேற்றம் என்ற பாதையில் எப்படி அடியெடுத்து வைக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் சாமான்ய இந்தியனை இத்தைகைய ஃபத்வாக்கள் எப்படி பாதிக்கும் என அணுவளவாவது யோசித்தீர்களா?
ஆடுகள் முட்டி சண்டை போட்டவுடன், எந்த ஆடு முதலில் மயங்கி விழும் அதில் எத்தனை கறி தேரும் என நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையும் வெட்கங்கெட்ட இந்திய ஊடக நரிகள், வழக்கம் போல சிண்டு முடியும் வேலையை துவங்கி விட்டன. இது எங்கு போய் முடியுமோ அந்த பாரத மாதாவுக்கே வெளிச்சம்.
வந்தே மாதரம் – வருதய்யா ஆத்திரம்.