Thursday, October 4, 2012

நெருப்பு இன்னும் அணையவில்லையோ ???

இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. (இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும். உனக்கு என்ன நினைவிருக்கிரதென்று யார் கேட்கப் போகிறார்கள்) 1988 – ம் வருடம், அப்பொழுது சண்டிகர் நகரிலிருந்து சிம்லா செல்லும் நெடுஞ்சாலையில் 28 வது கிலோமீட்டரில் சூரஜ்பூர் என்றொரு கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்தை அடுத்து உள்ள ஒரு சிமென்ட் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன். என் அண்ணா ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலாவில் இந்திய விமானப் படையில் பணி புரிந்து வந்தார். நவம்பர் மாத ஞாயிற்றுக் கிழமையொன்றில் என் அண்ணாவை அம்பாலாவுக்கு சென்று பார்த்து விட்டு, சண்டிகர் வந்து, அடுத்து சண்டிகரிலிருந்து பஸ் பிடித்து சூரஜ்பூர் போகவேண்டும்.

சண்டிகர் நகரின் பஸ்நிலையத்துக்கு எதிரே உள்ள ஒரு ஹோட்டலில் அமர்ந்து இரவு உணவு உண்டு கொண்டிருக்கிறேன். ஹோட்டலில் இன்னும் இரண்டு பேர் அமர்ந்து உண்டு கொண்டிருந்தார்கள். கல்லாவில் முதலாளி அமர்ந்திருக்கிறார். நல்ல குளிர். குளிருக்கு இதமாக சூடான ரொட்டியும் சிக்கன் குருமாவும் அருமையான சுவை. அப்பொழுதுதான் அவரை பார்த்தேன்.

ஆறரை அடி உயரம், பறந்து விரிந்த தோள்கள். நெஞ்சுக்கு கீழே வரை வளர்ந்து படர்ந்த தாடி, முறுக்கிய மீசை, நீலக்கலரில் ஒழுங்காக சுற்றிக் கட்டிய தலைப்பாகை, மெல்லிய துணியில் தைத்த ஒரு குர்த்தா, நெஞ்சுக்கு குறுக்கே தொங்கும் ஒரு தோல்பட்டை அதனுள் இடது புறமாக தொங்கும் கிர்ப்பான் (சீக்கியர்களுக்கே உரிய ஒரு குறுவாள்), வலது புறத்தில் ஒரு ரிவால்வர் துப்பாக்கி. ஆஜானுபாகான அந்த மனிதன் நடந்து வருவதைப் பார்த்தாலே கையும் காலும் உதறல் எடுத்தது. அவரைக் கண்டவுடனே மனதுக்குள் ஒரு வித்தியாசத்தை உணர முடிந்தது. நவம்பர் மாத குளிருக்கு எல்லாரும் ஸ்வெட்டர், குல்லா என ஏதாவது ஒரு கம்பளி ஆடை அணிந்திருக்க இந்த மனிதன் மாத்திரம் எதற்கு இப்படி ஒரு மெல்லிய துணியுடன் சுற்றுகிறான். ம்ஹும், என்னவோ சரியில்லை என மனதுக்குள் மணியடித்தது. அதை நிரூபிப்பது போலவே அந்த சீக்கியர் தாறுமாறாக நடந்து வந்தார். ரிவால்வரையும் கத்தியையும் இரு பக்கமும் பார்த்தவுடன் ஆஹா, இந்த சிக்கன் முடிவதற்குள்ளாகவே நான் முடிந்து விடுவேனோ என ஒரு பயம் வந்து கையும் காலும் நடுங்க ஆரம்பித்தது. ரொட்டியை பிய்த்த கை அப்படியே அசைவற்றிருக்க இமைத்த கண்களை மூட மறந்து பீதியில் உறைந்து போயிருந்தேன். அதே அளவு பீதியில் கல்லாவில் இருந்தவரும் இருந்தாரோ என்னவோ அவரும் அசைவற்று என்னைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தார். வந்த மனிதர், எனக்கு முன்னால் இரண்டு மேஜைகள் தள்ளி அமர்ந்திருந்த இருவரையும் ஒரு நொடி நின்று பார்த்தார். அவர்களும் அதே பீதியில் இருந்தார்களோ என்னவோ, அவர்களை விட்டுவிட்டு என்னிடத்தில் வந்தார். ஒரு முறை என்னையும் பிறகு நான் சாப்பிடும் உணவையும் பார்த்தார். ஓரிரு நொடிகள் பார்த்தவுடன் என்னைப் பார்த்து ஹிந்தியில் “க்யூம், கைசா ஹை” என்றார். வார்த்தைகள் தொண்டையிலேயே மரித்து விட்டதால் ஈன ஸ்வரத்தில் “டீக் ஹை” என்றேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, உடனே திரும்பி சென்று விட்டார்.

அதற்கு அடுத்து நடந்ததுதான் நம்ப முடியாதது. அந்த சீக்கியர் சென்றவுடன், முதலாளி கல்லாவிலிருந்து நடந்து வந்தார் என சொல்ல முடியாது, பறந்து வந்தார். உடனடியாக ஒரு சொம்பு தண்ணீரை தூக்கி வந்து உடனே கையை கழுவு இடத்தை காலி பண்ணு என்றார். இதற்குள் உண்டு கொண்டிருந்த மற்ற இருவரும் காணாமல் போயிருந்தனர். என்ன நடக்கிறது என தெரியாமலே ஒரு வித பீதியுடன் கையை கழுவி நிமிர்ந்து பார்த்தால் அடுத்த அதிர்ச்சி, கடையின் முன்கதவு அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. திரும்பிப்பார்த்த முதலாளி, என் கையைப் பிடித்து பின்பக்கமாய் சமையலறை வழியாக இழுத்துக் கொண்டு போய் என்னை வெளியே தள்ளிவிட்டு பின்பக்க கதவையும் சாத்தி விட்டார். கும்மிருட்டில் என்ன செய்வதென்று தெரியாமல், அடிக்கும் குளிர் முகத்தில் உறைக்க, கடையை சுற்றி முன்பக்கம் வந்தேன். ஐந்து நிமிடத்திற்கு முன் இருந்த அத்தனை சத்தங்களும் அழிந்து போய், ஓரிரு மனிதர்கள் மட்டும் வேகமாய் நடந்து கொண்டிருந்தார்கள். ஜமீன்தார்கள் வேட்டைக்கு போனால் ஒரு திறந்த ஜீப்பில் போவார்களே அப்படி ஒரு ஜீப்பில் இரண்டோ மூன்றோ சீக்கியர்கள் அமர்ந்திருந்தார்கள். மூளைக்குள் எதுவோ ஆபத்து என்ற அபாய சங்கு ஒலிக்க பஸ்ஸ்டேண்டில் ஏதாவது பஸ் இருக்கிறதா என பார்த்தால் மூன்று பஸ்கள் இருந்தது. இப்பொழுது நான் இருக்கும் இருட்டான இடத்தில் இருந்து பஸ்ஸுக்கு செல்ல ரோட்டை கடக்க வேண்டும், ரோட்டை கடந்தால் அந்த ஜீப்பில் இருப்பவர்கள் கண்ணில் படுவேன், ஜீப்பில் இருப்பவர்களை பார்த்தால் நல்லவர்கள் போல் தெரியவில்லை, என்ன செய்யலாம். இங்கு இருட்டில் நிற்பதும் சரியானதாய் படவில்லை. ஒரு குருட்டு தைரியத்தில் ஒரே ஓட்டமாக ரோட்டை கடந்து பஸ்சுக்குள் தாவி ஏறி விட்டேன். ஓடும் பொழுது அந்த எழவு ரிவால்வர் வேறு ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது. அப்பாடா நிம்மதி, பஸ்சுக்குள் வந்தாகி விட்டது. அடுத்த சில நொடிகளில் பஸ்சும் கிளம்பி விட்டது. பின்பு சூரஜ்பூர் வந்து படுக்கையில் விழுந்ததும் இரவு முழுவதும், துப்பாக்கி, தாடி வைத்த சர்தார்கள், வேட்டைக்கு போகும் ஜீப் என எல்லாமுமாக ஒரு த்ரில் பட ரேஞ்சுக்கு கனவுகள் வந்தது.

காலையில் கொட்டை எழுத்தில் செய்தித்தாள்களில் “பஞ்சாப் மாநில போலீஸ் உயர் அதிகாரி நேற்று இரவு சண்டிகர் பஸ் நிலையம் முன்பு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்” என செய்தி வந்தது. என்னைப் பார்த்து நலம் விசாரித்த சர்தார்ஜிதான் ......... டேய் அவனா நீயி, யப்பா யார் செஞ்ச புண்ணியமோ தப்பித்தேன்.

இப்படி பஞ்சாப் மாநிலத்தை தீவிரவாதம் தன் கோரப்பிடிக்குள் வைத்திருந்த காலம் மிகவும் கொடுமையான காலமிது. எல்லா பஞ்சாபியர்களும் மறக்க நினைக்கும் காலமது. நல்ல விளைநிலங்கள், வற்றாத ஜீவ நதிகள், பாசத்தோடு பழகும் வெள்ளந்தி மனிதர்கள், சத்தான சாப்பாடு, மகிழ்ச்சி தரும் கலாச்சாரம் என ஒரு அமைதிப் பூங்காவாக விளங்கிய பஞ்சாபில் தான் தீவிரவாதமும் தன் கோர தாண்டவத்தை ஒரு முறை ஆடித்தீர்த்தது. மதவெறியும் இனவெறியும் மக்களை தன்வசம் ஈர்த்தது. சீக்கியர்கள் தங்களின் உயிரினும் மேலாய் மதிக்கும் பொற்கோவிலுக்குள் ராணுவத்தை புக வைத்து ஒவ்வொரு சீக்கியனின் நெஞ்சிலும் ஈட்டியை சொருகியது. இந்தியப் பிரதமர் ஒருவரின் உயிரை காவு வாங்கியது. இப்படி எல்லா கொடுமைகளையும் விளைவித்து தீர்த்த தீவிரவாதம் தானாகவே தணியவும் தொடங்கியது. மக்களும் மீண்டெழுந்து வந்தார்கள். இந்த தீவிரவாதம் நமது வாழ்கையை முடக்கும் ஒரு முடக்கு வாதம் என புரிந்து கொண்டார்களோ என்னவோ, வெகு சீக்கிரமாகவே அதன் சுவடுகள் அழிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி விட்டது என நிம்மதிப் பெருமூச்சு விட்டு இளைப்பாற ஆரம்பிக்க கூட இல்லை. இதோ மறுபடியும் அதன் வேர்களிலே நீரூற்றி தழைய விட முயற்சி செய்கிறார்கள்.

லெப்டினென்ட் ஜெனரல் குல்தீப் சிங் ப்ரார் – 1984 ம் வருடம் மே மாதம் முப்பத்தொன்றாம் தேதி, மீரட் நகரத்தில் இருக்கும் இந்திய படைப்பிரிவுக்கு தலைமை வகித்திருந்த குப்தீப் சிங்குக்கு தலைமையிடமிருந்து போன் வருகிறது. உடனடியாக கிளம்பி சண்டிகருக்கு அருகிலிருக்கும் சண்டி மந்திர் ராணுவ தளத்திற்கு வா.., அடுத்த நாள் மனைவியுடன் ஒரு மாத விடுப்பில் பிலிப்பைன்ஸ் நாட்டு மணிலாவுக்கு சென்று விடுமுறையை கழிப்பதற்காக துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தவர், ஒரு மீட்டிங் இருக்குதும்மா போயிட்டு வந்திர்றேன், ராத்திரி பிளைட்டுக்கு தயாரா இரு என்று சொல்லி விட்டு சென்றார். சண்டி மந்திரில் லெப்டினென்ட் ஜெனரல் கிருஷ்ணசாமி சுந்தர்ஜியும், லெப்டினென்ட் ஜெனரல் ரஞ்சித் சிங் தாயாலும் வரவேற்றனர். இன்று இரவே நாம் அமிர்தசரஸ் போகிறோம். பொற்கோவிலுக்குள் தீவிரவாதிகள் புகுந்து கொண்டு தரிசிக்க வந்த பக்தர்களை மனித கேடயமாக பயன்படுத்துகிறார்கள். அவர்களை மீட்க வேண்டும். அதற்கு நீங்கள் தலைமை ஏற்கப் போகிறீர்கள் என்று மேலிட ஆணையை காண்பித்தார்கள். மனதில் ஒரு கணம் துணிகளை அடுக்கும் மனைவியிடம் என்ன மன்னிச்சுரும்மா என மானசீகமாக மன்னிப்பு கேட்டு விட்டு அமிர்தசரசுக்கு விமானமேறிவிட்டார். பிறகு அவர் செய்ததெல்லாம் “ஆப்பரேஷன் ப்ளு ஸ்டார்” என்று படித்திருப்பீர்கள். அதன் எதிரொலியாகத்தான் அதில் ஈடுப்பட்ட அத்தனை பேரையும் காலிஸ்தான் குழுவினர் வரிசையாக போட்டுத்தள்ளிக் கொண்டே இருந்தார்கள். இந்திரா காந்தி கொல்லப்பட்டதும் இதன் காரணமாகத்தான். ஆண்டுகள் முப்பது முடிந்து விட்ட பொழுதும் இன்னமும் அந்தக் கனல் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. இந்திய அரசாங்கமும் அந்த துரதிஷ்டவசமான ஆப்பரேஷனில் கலந்து கொண்ட அத்தனை பெருந்தலைகளையும் பொத்திப் பொத்தி பாதுகாத்து வந்தது. வருகிறது. இந்த குல்தீப் சிங் இப்பொழுது மும்பை நகரில் ஒரு உயரிய பாதுகாப்பு வளையத்துக்குள் வாழ்ந்து வருகிறார்.

கொஞ்சம் மாற்றத்திற்காக லண்டன் சென்ற அவர், அந்நகரில் தனது மனைவியுடன் ஒரு உணவு விடுதியில் உணவு அருந்தி விட்டு வெளியே வந்தவுடன், அதற்காகவே காத்திருந்தவர்கள் போல் நான்கு பேர் அவர் மீது பாய்ந்து அவரது குரல்வளையை அறுக்க முயற்சித்திருக்கிறார்கள். என்னதான் வயசானாலும் ராணுவ ரத்தமாயிற்றே, தன் மனைவியை ஓடி விடும்படி சொல்லி விட்டு தனியே அந்த நால்வரையும் சமாளித்திருக்கிறார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர் மனைவி பெருங்குரலெடுத்து ஓலமிட, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வருவதை கண்ட நால்வரும் உடனே இவரை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். ஆனால் அதற்குள் கணிசமான அளவு கத்திக் குத்துகள் உடலில் ஏற்பட்டு விட்டது. ரத்தம் வழிய வழிய அவரை அப்படியே தூக்கி ஒரு ஆம்புலன்சில் போட்டு மருத்துவ மனைக்கு கொண்டு போயிருக்கிறார்கள். மனிதன் உயிர் தப்பி விட்டார்.

காலிஸ்தான் தீவிரவாதம் முழுவதும் ஒழிக்கப்பட்டு விட்டது என நிம்மதியாக இருந்தோமே, அடேய், தாடிக்கார தம்பிகளா, இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா இந்த பொற்கோயில் வன்மத்தை மனசுல வெச்சுகிட்டு குரல்வளையை அறுத்துகிட்டு திரீவீங்க..., வேண்டாம்பா வினை விதைத்தவன் தினை அறுத்ததில்லை. இந்த தீவிரவாதத்திற்கு தீனி போட்ட யாருமே நிம்மதியா வாழ்ந்ததில்லையப்பா.... நெருப்பு அணைஞ்சுருசுன்னு நினைச்சமே, நீங்க இன்னமும் அணைக்கவே இல்லையோ......

9 comments:

அமுதா கிருஷ்ணா said...

எவ்ளோ நாட்கள் ஆனாலும் மறக்க விடமாட்டார்கள் போல.நிறைய விஷயம் தெரிந்து கொள்ள முடிகிறது உங்கள் பதிவுகளில்.

தராசு said...

வாங்க அமுதா

வந்ததுக்கு டேங்சு

தமிழன் said...

arumai
http://andamantamilan.blogspot.in/

senthur stocks said...

அருமையான வலைத்தளம்!!!!!
சண்முகசுந்தரம்
பங்கு சந்தை, பற்றி தெரிந்துகொள்ள,
மற்றும் பணம் பண்ண Free Mcx Tips , Free Stock Tips

மாற்றுப்பார்வை said...

அருமை

Pattabi Raman said...

பழியுணர்ச்சி
என்றும் அழியாத நெருப்பு

மன்னிக்கும் குணமே
அதற்க்கு மருந்து.

வரலாற்று சுவடுகள்
சிலர் மனதிலிருந்து நீங்குவதேயில்லை.

இந்த கட்டுரை அதற்கு உதாரணம் .

karthikeyan k.s said...

please visit immediately

jothida express

www.supertamilan.blogspot.in

karthikeyan k.s said...

please visit immediately

jothida express

www.supertamilan.blogspot.in

Sathiya Balan M said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News