Wednesday, October 21, 2009

ஜுகல்பந்தி – 21 – 10 – 2009 - விகாரங்களின் திருவிழா

நகரம் – புஷ்கர் – பிரம்மனின் நகரம்.

ராஜஸ்தானிய பாலைவன நகரங்களில் ஒன்று. ஜெய்ப்பூரிலிருந்து அஜ்மீர் சென்று அங்கிருந்து இன்னும் 11 கிலோமீட்டரில் இந்த மணல் பரப்பில் கால் பதித்து விடலாம். ஏரிகள், ஆலயங்கள், கடைகள், கலைகளின் வெவ்வேறு வடிவங்கள், இழுத்து சுருட்டப் பட்ட மீசை, ஒரு புடவையை விட நீளமான துணியில் தலைப் பாகை, அத்தனை வண்ணங்களையும் கலந்து ஒரே துணியில் தைத்து, மார்பை மட்டும் மறைத்து விட்டு முதுகு திறந்து நடமாடும் பெண்கள், மணல், மணல். மற்றும் மணல் என ஒரு குதூகலக் கலவை தான் இந்த நகரம்.

வருடத்திற்கு ஒரு முறை மாத்திரமே களைகட்டும் விலங்குச் சந்தையில் ஒட்டகங்கள் முக்கிய பங்கு வகிக்கும். ஆயிரக் கணக்கான ஒட்டகங்கள், கழுதைகள், ஆடு மாடுகள், பறவைகள் என எல்லாம் விற்பனைக்கே. இவை அனைத்தும் சேர்ந்து ஒரு சேர கத்துவதில் ஒரு ஜுகல் பந்தி உருவாகும் பாருங்கள், ஆஹா, கேட்க காது கோடி வேண்டும்.

பிரம்மனுக்கு என ஒரு கோவில் உண்டென்றால் அது இங்குதான். பிரம்மனுக்கு மற்றும் சில கோவில்கள் இந்தோனேசியாவின் பாலித்தீவிலும், இன்னும் உத்தரப் பிரதேசத்திலும் உண்டென்றாலும், புஷ்கரில் எழுந்தருளியிருக்கும் பிரம்மன் விஷேசமானவனே. பிரம்மன் ராதாகிருஷ்ணனின் தரிசனம் வேண்டி அறுபது ஆயிரம் வருடங்கள் இங்கு காத்திருந்ததாக கதை சொல்லப்படுகிறது.

விசுவாமித்திரர் தவமிருந்த இடமென்றும், தேவலோக அப்சராவான மேனகை குளித்த ஏரியென்றும், மகாபாரத அவதார புருஷனான தரும ராஜா, இந்த ஊர் வழியாகத்தான் சிந்து நதியின் சமவெளி பிரதேசத்துக்கு கடந்து போனாரென்றும், வாமன புராணத்து கதைகளின் படி, பிரகலாதன் இங்கு வாழ்ந்தானென்றும் இன்னும் எத்தனையோ கதைகள் உள்ளன.

இத்தனை புராதனங்கள் நாடி நரம்புகளிலெல்லாம் ஓடி ஊடுருவினாலும், இன்று இந்த நகரமும் நவீன மயமாக்கலின் தாக்கத்திலிருந்து விடுபடவில்லை. ஒருபுறம் வெள்ளி ஜரிகைகளாலும், வண்ண போர்வைகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஒட்டகங்களின் பவனி, திருவிழா நாட்களில் வெப்பக் காற்று பலூனில் ஆகாயத்தில் மனிதர்கள், நீண்ட மீசையை சுருட்டி முகமெங்கும் படரவிட்டு முண்டாசுகளுடன் பெருசுகள், நீண்ட மீசை யாருக்கு என போட்டிகள், ஒட்டகங்களின் ஓட்டப் பந்தயங்கள் என ஊரே ஒரு பதினைந்து நாட்களுக்கு திமிலோகப் பட்டுக் கொண்டிருக்கிறது. கிரிக்கெட் இந்த ஊரையும் விட்டு வைக்கவில்லை, பிராந்திய புஷ்கர் கிரிக்கெட் அணிக்கும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வெள்ளைத்தோல் அணிக்கும் இடையே இந்த மணற்பரப்பில் நடக்கும் கிரிக்கெட் போட்டி மிகவும் பிரபலம். (வா, ராசா, லலித் மோடி, எங்கப்பா போயிட்ட நீ, கிரிக்கெட்டை வைத்து பணம் பண்ண இதோ இன்னொரு ஐடியா தயார். அடுத்து பாலைவன கிரிக்கெட்னு ஒண்ணு ஆரம்பிச்சு, சந்தோஷமா வாழ்க்கை நடத்தற அரேபிய நாடுகளையும் வளைச்சுப் போட்டு, அவங்க நிம்மதியையும் கெடுத்துரு ராசா, இது இன்னும் உங்கண்ணுக்கு ஏன்தான் தெரியலயோ)

இந்த களேபரங்களுக்கு மத்தியில் வெளிநாட்டவரை கவர்வதற்கெனவே, இந்த மணற்பரப்பில், ஆடல் பாடல், கேளிக்கைகள், விபச்சாரம், போதை வஸ்து என எல்லா கண்றாவிகளும் இருள் கவிந்ததும் நடக்கும்.

கார்த்திகை மாதத்து பௌர்ணமிக்கு முன்னாலும் பின்னாலுமென ஒரு 15 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவை, ஒரு முறையேனும் பார்த்து விட்டு, பிரம்மனின் அருள் பெற்று, பௌர்ணமியன்று பிரம்மனின் கரம் பட்ட ஏரிகளில் குளித்து, உங்களுக்கு எந்த விளைவு ஏற்பட்டாலும் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.

ஹாலோவீன் – விகாரங்களின் திருவிழா.

ஐரோப்பிய தேசங்களில் கோடைகாலம் முடிந்து குளிர்கால தொடக்கத்திற்கு அறிகுறியாக, தங்கள் விளைநிலங்களின் பலன்களை முன்னோர்களுக்கு அர்ப்பணித்து மகிழ்ந்த விவசாயிகளுக்கு அசுத்த ஆவிகளின் பரிச்சயம் எங்கு ஏற்பட்டதோ தெரியவில்லை. கெட்ட ஆவிகளை விரட்டியடிக்க விகாரமான முக மூடிகளை அணிந்து கொண்டு விழாவெடுக்க ஆரம்பித்தனர். இதற்கிடையில் மதவாதிகள் உள்ளே புகுந்து முன்னோர்களின் ஆவிகளுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற ஒரு சடங்கை புகுத்தி, அதை இயேசு கிறிஸ்துவின் திருப் பெயரால் கட்டாயப் படுத்தி “All Saints Day” என்ற ஒரு தத்துவத்தை மக்களின் மீது திணித்து விட்டார்கள். இந்த புனிதர்களின் திருநாள் தான் பெயர் மருவி, நோக்கம் மருவி, குணம் மருவி, இன்னும் என்னென்னமெல்லாமோ மருவி விகாரங்களின் நாளாகி விட்டது.

1840களில், முற்றிலும் விவசாய தேசங்களான, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து நாடுகளில் ஏற்பட்ட பஞ்சத்தில் அடிபட்ட விவசாயிகள், தங்கள் பரம்பரை பழக்கங்களோடு அமெரிக்க மண்ணில் பஞ்சம் பிழைக்க தஞ்சம் புக, இந்த ஆவிகளோடு பேசும், பழகும் பழக்கம் ஒரு புது பரிமாணம் எடுத்தது. சூனியக் காரர்கள், கண்கட்டு வித்தை செய்பவர்கள், மந்திரவாதிகள், எலுமிச்சைப் பழத்தில் ஊசி குத்தி ரத்தம் வரவழைக்கும் மோடி மஸ்தான்கள், ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் என்னும் அறிவு ஜீவிகள் என எல்லோருக்கும் இந்த நாள் ஒரு விழா நாளாக மாறிவிட்டது. உடம்பில் விகார உருவங்களை பச்சை குத்திக் கொண்டு, எலும்பில்லாத இடங்களிலெல்லாம் துளையிட்டு வளையங்களை மாட்டிக் கொண்டு, ஆணும் பெண்ணும் மறைக்க வேண்டிய உடல் உறுப்புகளை திறந்து காட்டி, அசுத்த ஆவிகளை பயமுறுத்துகிறோம் என்ற போர்வையில் அருவருப்பான் முக மூடிகளுடன் ஊர்வலம் போகிறார்கள்.

அக்டோபர் மாதத்தின் கடைசி நாளில் நியூயார்க நகர வீதிகளில் இந்த விகார முகமூடி ஊர்வலங்கள் நாள் முழுவதும் நடக்கும்.

பதிவர் வட்ட தீபாவளி

எல்லாரும் எல்லாருக்கும் வாழ்த்துச் சொல்லி, நான் டவுசர் போட்டிருந்த பொழுது, நாங்கள் பாவாடை சட்டையில் உலாத்திய பொழுது தீபாவளி எப்படி நல்லா இருந்துச்சு தெரியுமா என காலச் சக்கரத்தை பின்னோக்கி இழுத்து, பதிவுலக வன்முறைகளுக்கு கண்டனம் சொல்லி, காயப் பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லி, காயப் படுத்தியவர்களுக்கு கொம்பு சீவி விட்டு, சினிமாக்களை பிரித்து மேய்ந்து, காமன் மேனை கவிழ்த்துப் போட்டு என பதிவுலகில் இந்த தீபாவளியிலும் பட்டாசு நன்றாகத்தான் வெடித்தது. என்ன ஒரே ஒரு குறை, வேட்டைக்காரன் வந்திருந்தான்னா, அவன வெச்சு கொஞ்சம் மத்தாப்பு கொளுத்தி இருப்போம், ஆனா அவுரு என்னமோ இப்பத்தான் அம்பு செதுக்காறாரு போல இருக்குது, ஏன்னா வில்லு தான் வெளங்காம போயிடுச்சே, இனி வேட்டைக்காரன் எதுல அம்பு விடுவாரோ தெரியல.

ங்கொய்யால பக்கங்கள்


அப்பாவுக்கு புதுக் கண்ணாடி,

அம்மாவுக்கு புது புடவை,

ஆத்துக்காரிக்கு புதுப் பட்டு,

தங்கச்சிக்கு தங்கச் செயினு,

தம்பிக்கு டிஜிட்டல் கேமரா,

வாரிசுகளுக்கு புதுத்துணி, பட்டாசு,

வந்தவங்களுக்கு வழிச்செலவு,

பக்கத்து வீட்டுக்கு ஒரு தட்டு பலகாரம்,

ஒரு வழியா தீவாளி முடிஞ்சுது,

ங்கொய்யால,

இப்போதைக்கு இதெ வெச்சு ஓட்டு,

அடுத்த தீவாளிக்கு புதுச்செருப்பு வாங்கலாம்.

12 comments:

இளையராஜா said...

me the first

இளையராஜா said...

//என்ன ஒரே ஒரு குறை, வேட்டைக்காரன் வந்திருந்தான்னா, அவன வெச்சு கொஞ்சம் மத்தாப்பு கொளுத்தி இருப்போம், ஆனா அவுரு என்னமோ இப்பத்தான் அம்பு செதுக்காறாரு போல இருக்குது, ஏன்னா வில்லு தான் வெளங்காம போயிடுச்சே, இனி வேட்டைக்காரன் எதுல அம்பு விடுவாரோ தெரியல.//

for me also.................

பிரபாகர் said...

//ஏன்னா வில்லு தான் வெளங்காம போயிடுச்சே, இனி வேட்டைக்காரன் எதுல அம்பு விடுவாரோ தெரியல.
//
இதுலயாவது கொஞ்சம் லாஜிக்கா இருந்தா பொழைச்சுக்கும். இல்லன்னா ஆளையே கவுத்துடும்...

போயி பாக்காலாம் போலத்தான் இருக்கு... நல்லா அருள் கிடைக்கிற மாதிரித்தான் தெரியுது...

புஷ்கர் - புது தகவல்...

பிரபாகர்.

நாஞ்சில் நாதம் said...

ஜுகல்பந்தி அருமை. அதிலும் புஷ்கர் - புது தகவல்...

விகாரங்களின் திருவிழா -

// ஊரே ஒரு பதினைந்து நாட்களுக்கு திமிலோகப் பட்டுக் கொண்டிருக்கிறது. //

இப்போ அங்க தான் இருக்கீங்களா?

anujanya said...

வழக்கம் போல கலக்கல். நடை இன்னும் பிரமாதமாக இருக்கு.

அனுஜன்யா

விக்னேஷ்வரி said...

முதல் பத்தியே அந்த நகரத்திற்குப் போகும் ஆவலைத் தூண்டுகிறது.

நல்ல ஜுகல்பந்தி.

தராசு said...

வாங்க இளைய ராஜா,

வேட்டைக்காரன எதிர்பார்த்து பல பேர் கிளம்பியிருக்காங்க.

தராசு said...

வாங்க பிரபாகர்,

புஷ்கருக்கு போறதுன்னா, இப்பவே கிளம்புங்க, திரு விழா இன்னும் 5 நாள்ல முடிஞ்சுரும்.

தராசு said...

வாங்க நாஞ்சில்,

வந்ததுக்கு நன்றி.

இப்ப அங்க இல்ல, புஷ்கருக்கு கொஞ்சம் பக்கத்துல தான் இருக்கேன்.

தராசு said...

வாங்க அனுஜன்யா,

வந்ததுக்கு டேங்சு.

தராசு said...

வாங்க விக்னேஷ்வரி,

வந்ததுக்கு டேங்சு

Thamira said...

ஹாலோவீன் ஏதோ சுவாரசியமான விழானுல்ல நான் நினைச்சுக்கிட்டிருந்தேன். அடடா..

அப்புறம் ங்கொய்யால வரிகள் நல்லதொரு கவிதையாக பட்டது எனக்கு.!